காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு செயலர்கள் பங்கேற்பு – ஸ்டாலினுடன் கலந்து முடிவு செய்த முதல்வர்

514 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசு செயலர்கள் பங்கேற்க உள்ளனர். மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி இதற்கான முடிவை முதல்வர் எடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கர்நாடக அரசோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 4 மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளும் மார்ச் 9-ம் தேதி டெல்லி வரும்படி நீர்வளத்துறை அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படலாம்.

மத்திய அரசு ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் யாரை அனுப்பலாம்? என்று ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில்  தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment