அம்பாறை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பாறை சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான செய்தியொன்றை அடிப்படையாக வைத்தே இந்த வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலட்டு மாத்திரை என்ற ஒன்று தற்பொழுதுள்ள ஆங்கில மருத்துவத்தில் இல்லை. இலங்கையில் தொழில்நுட்பம் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையிலும், இதுபோன்ற கருத்துக்களை நம்புவதில் புத்திக் குறைபாடுள்ளவர்களாகே உள்ளனர்.
மிகவும் சிறிய ஒரு பிரச்சினையை முதன்மைப்படுத்தி முழு நாட்டையும் தீ வைக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
பக்கச் சார்பற்ற ஒரு விசாரணையை முன்னெடுப்பதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்தார். அம்பாறை சம்பவம் உடனடிக் காரணங்களினால் உருவான ஒன்றா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்க காலத்தில் இருந்த முக்கிய நபரினால் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் அம்பாறை சம்பவம் இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் செயற்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடனும் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மலட்டு மாத்திரை என்ற போர்வையில் இனவாதத் தீயை மூட்டஇவர் செயற்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இனவாதம் பேசி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்பொழுதுள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரானது. இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் ஆதரவாக செயற்படுபவர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இந்த அரசாங்கம் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கிடைத்துள்ள சமாதானத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

