அம்பாறை பள்ளிவாசலை முஸ்லிம் விவகார அமைச்சினூடாக புனரமைக்க நடவடிக்கை-எம். எச். ஏ. ஹலீம்

4908 0

 தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
நாட்டில் நல்லாட்சியின் மூலம் தோற்கடிப்பட்டிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நல்லாட்சி மீதும் அரசாங்கத்தின் மீதும் முஸ்லிம் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்து முஸ்லிம்களை மண்டியிடச் செய்யும் போக்கை கொண்டதாகவே அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தும் இந்த ஈனச் செயலை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாது, வியாபார நிலையங்கள் மற்றும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்யீட்டைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு பள்ளிவாசலை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.

Leave a comment