”நானும் அரசியல் படித்துவிட்டேன்” -வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

222 0

“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றாகும். இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆரம்பத்தில் இருந்தே தமிழரசுக்கட்சி என் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனை நான் தான் புரிந்து கொள்ளவில்லை, என் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் என் மீதான அச்சுறுத்தல் என அனைத்தையுமே தமிழரசுக்கட்சி தான் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இவ்வாறு இருந்து கொண்டு, இதர கட்சியினரை குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.

இனிமேல் என்னால் அரசியலில் இருந்து விலகி, சாதாரண ஒரு வாழ்க்கையைத் தொடரமுடியாது. காரணம் பின்புலத்தில் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை என்பது பாரதூரமானதாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள கட்சி இவ்வாறு என்மீது தாக்குதல் மேற்கொள்ள முனைவது ஜனநாயகம் அற்றது.

நான் உயிருக்கு பயப்படுபவர் அல்ல. நானும் திருப்பி அடிப்பேன். நான் அரசியலை வடிவாக படித்துவிட்டேன். கட்சி என் மீது மேற்கொண்ட குற்றங்கள், தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவேன்.

2015 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எந்த ஒரு முடிவும் கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அது தொடர்பான நடவடிக்கையாகவே என்னை கட்சியிலிருந்து விலக்குதல் என்பது, எந்த விதத்தில் நியாயம், இதனை விட இந்த விவகாரம் தொடர்பில் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

என்மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என கட்சி அறிவித்தது. இதன்படி என்னை விசாரணைக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். கொழும்பு செல்வதுக்கான வாகன வசதியும் இல்லை. அத்தோடு பாதுகாப்பு பிரச்சினையும் இருந்தது. இதனை விசாரணை குழுவில் அங்கம் வகித்த சட்டத்தரணி தவராஜாவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். அதனை அவர் எழுத்தில் கோரிய நிலையில், எனது தரப்பு முழு விடயத்தையும் நான் எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.

விசாரணை முடிவில் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் இருக்கலாம் எனவும் கட்சியின் மகளீர் விவகார செயலாளராக பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது முதல் 5 வருடங்கள் என கூறப்பட்டு பின்பு 3 வருடங்களுக்கு என கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது கட்சியில் இருந்து நிறுத்துவது என்ன, என்பது எனக்கு புரியவில்லை. கட்சி என் மீது திட்டமிட்டே இவற்றை செய்கிறது. இது தொடர்பாக எனக்கு எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் கட்சியினால் வழங்கப்படவில்லை. நானும் இவ்விடயத்தை பத்திரிகை செய்தி வழியாகவே அறிந்து கொண்டேன். இச்செய்தி தொடர்பான முழுமையான எனது விளக்கத்தை அறிக்கை வடிவில் விரைவில் வெளிப்படுத்துவேன்” என தெரிவித்தார்.

Leave a comment