மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமை வழங்க முடியாது- மஹிந்த

196 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ​வேண்டும் என கூட்டு எதிரணி கோருவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஐ.ம.சு.மு. எம்.பி.க்களாக தெரிவானவர்களே இன்று எதிரணியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களால் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கோர முடியாது.

ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்ந்த போது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் சு.க. மத்திய குழுவும் இது தொடர்பில் முடிவு எடுத்தது.

ஆனால் ஒரு குழுவினர் எதிர்க்கட்சியில் அமர அனுமதி கோரினார்கள். அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட உரிமையை அவர்கள் தவறாக பயன்படுத்தினார்கள். தனிக்கட்சி அமைக்க அவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

சகல ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பில் அமர வேண்டும் என அன்று முடிவு செய்திருந்தால் இன்று எதிரணியில் உள்ள பலருக்கு பாராளுமன்றம் செல்ல கிடைத்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment