கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கட்சி சார்பில் இன்று மன்னார்காட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபகாலமாக கேரளாவில் பல்வேறு பகுதியில் அரசியல் மோதல்களும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் இது கொலையிலும் முடிந்துள்ளதால் அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
இதைதொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல் மோதல்களை தடுக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆனாலும் கேரளாவில் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலக்காடு அருகே மன்னார்காடு பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் சபீர் (வயது 22). இவரது தந்தை சிராஜ் கவுன்சிலராக உள்ளார்.
குன்னத்திபுழா என்ற இடத்தில் சபீர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று தனது கடைக்கு சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டது. இந்த தகவல் பரவியதும் அந்த கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சபீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் கட்சி தொண்டர்களும் சபீரின் உறவினர்களும் குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதுபற்றி அந்த கட்சி நிர்வாகிகள் கூறும்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த கொலைக்கு பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். அதேசமயம் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி நிர்வாகி சபீர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கட்சி சார்பில் இன்று மன்னார்காட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

