ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.40 கோடி சேர்ந்தது

261 0

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி சேர்ந்தது என்று குழுவின் தலைவர் ஜானகிராமன் கூறினார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்புக்குழு தலைவர் ஜானகிராமன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவர் பல்கலைக் கழக துணைவேந்தர் பாஸ்கரன், பதிவாளர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ் வளர்ச்சிக்கு, ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையும், தமிழ்ப்பல்கலைக்கழகமும் இணைந்து ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த 38 பேர் பிரதமர்களாக, ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர். 43 பேர் நோபல் பரிசுகளை பெற்றுள்ளனர். 43 பேர் சிறந்த எழுத்தாளர்களாக உள்ளனர்.

இப்படி உயர்ந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அணுகியபோது அவர்கள் ரூ.40 கோடி(6 மில்லியன் டாலர்) நிதி வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் 112 ஆண்டுகளுக்கு முன்பே 450 மில்லியன் டாலர் நிதி கொடுத்து சமஸ்கிருதத்துக்கு இருக்கை அமைக்கப்பட் டுள்ளது.

தமிழ்மொழி உன்னதமான மொழி. உலகில் ஒரு மொழிக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது என்றால் அது தமிழுக்குத்தான். தொன்மையான இந்த மொழியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூறினால் தமிழ் இன்னும் வளர்ச்சி அடையும்.

தமிழ்மொழிக்கு இருக்கை அமெரிக்காவில் உள்ள பெர்க்லின் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இது தவிர மெக்சிகோ, கொலம்பியா உள்பட 6 இடங்களிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி நிதி திரட்டப்பட்டு விட்டது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும். முதல்-அமைச்சரை அடுத்த வாரத்தில் சந்திக்க உள்ளோம்.

தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி உள்ளது. தமிழ் இருக்கை அமைந்த பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இன்னும் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment