சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவராக இருக்க முடியாது-மஹிந்த

217 0

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில்  இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தீரமற்ற அரசாங்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை. ஆகவே  நாட்டின் நலன் கருதி காலதாமதமின்றி பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆட்சி அதிகாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது எதிர்கட்சி பதவி தொடர்பில் பாரிய கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதவியை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்குவது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என்று குறிப்பிடுவது, வேடிக்கையாகவே காணப்படுகின்றது. தேசிய அரசாங்கத்தின் பங்காளியாக மாத்திரம் செயற்படும் எதிர்கட்சி தலைவர் தனது பதவியின் கடமைகளை கடந்த மூன்று வருடகாலமாக மேற்கொள்ளாமல் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றார்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட்டு எதிர்கட்சியை 50வீதமான மக்கள் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நிராகரித்துள்ளனர் என குறிப்பிட்டார். நாட்டு மக்களில் 93 வீதமானோல் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நிராகரித்ததை அவர் மறந்து விட்டார்.

எதிர்கட்சி தலைவர் என்ற பதவியானது அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்படவேண்டும் அப்போது தான் ஆளும் அரசாங்கம் நிர்வாகத்தினை முறையாக கொண்டு செல்ல முற்படும். ஆனால் இலங்கையில் அவை சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் எதிர்கட்சி பதவி ஒன்று உள்ளதா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகமாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment