காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

208 0

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த 16-ந்தேதி டெல்லியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வுகள் தொடர்பான விவாதத்தின் போது, தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது, அதனை நான் கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தமளிக்கிறது எனவும், தமிழ் மொழி பல சிறப்புகளை கொண்டது என தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் மாபெரும் மரம் நடு விழா நடத்தி அந்த ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டன. ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த ஆண்டு முழுவதும், 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என்ற இலக்கோடு இன்று கலைவாணர் அரங்க வளாகத்தில் முதலில் மரக்கன்றினை பிரதமர் நட்டு தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஜெயலலிதாவின் ஆசியோடும், அருளோடும் 16.2.2017 அன்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நான் அன்றைய தினமே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.

நான் முதன்முதலில் கையெழுத்திட்ட அந்த ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான “அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” தமிழ்நாட்டின் தலைமகளாகவும், தமிழ்த்தாயின் தவப்புதல்வியாகவும் திகழ்ந்த ஜெயலலிதா பிறந்த இந்த நன்நாளில் பிரதமர் தனது திருக்கரங்களால் தொடங்கி வைப்பதன் மூலம், இத்திட்டத்திற்கு மேலும் பெருமை சேர்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம்(ஸ்கூட்டர்) வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லவும், யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களது அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் செய்ய இயலும்.

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, மாதவம் செய்து பிறந்த மகளிரின் முன்னேற்றத்தில், ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டிருந்ததைப்போலவே, இந்தியாவை மாபெரும் வல்லரசாக்கும் திட்டங்களை வகுத்து விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிற பாரத பிரதமரும் மகளிரின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டு, பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருவதை இந்தியாவே பாராட்டுகிறது.

பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டதால் “அம்மா இரு சக்கர வாகனத் திட்ட விழாவும்” வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதற்காக பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துகொள்வதோடு, இந்த பொன்னான வேளையில், பிரதமரிடம் ஒரு சிறு கோரிக்கையை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வைக்க விரும்புகிறேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மற்றும் ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment