தமிழ் அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும் வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் – எஸ்.என்.கோகிலவாணி

354 0

unnamed (10)ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே அந்த அழுத்தத்தினை அப்பொருள் திருப்பிச் செலுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவ்வாறே மக்கள் மீது ஆளும் அதிகார வர்க்கம் மேலும் மேலும் தனது அதிகாரத்தைச் செலுத்தி அடக்க விளையும்போது அந்த அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பினைக் காட்ட வேண்டிய கட்டாயத் தேவை அங்குள்ள மக்களுக்கு எழுகின்றது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் அடக்கு முறைகளிற்கும் ஆக்கிரமிப்புகளிற்கும், அநீதிகளுக்கும் எதிராக பல வெகுஜனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. தம்மை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து முன்னெடுக்கப்பட்டு வந்த பல வெகுஜனப் போராட்டங்கள் வெற்றிகரமான வகையிலும் வினைத்திறனுள்ள வகையிலும் அமைந்திருந்தமையினை கடந்த கால வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.
உலகெங்கும் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திக்கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெஞ்சில் மிதித்து உழைப்பாளர்களால் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் வெற்றியே எட்டு மணி நேர வேலையை உலகம் முழுவதும் அனுபவிக்கக் காரணமாயிற்று.

அறுபதுகளின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற மாணவர் எழுச்சி அந்த நாட்டின் ஜனாதிபதியான சார்ள் டி கோல் ஐ ஜேர்மனியை நோக்கி அகதியாக அனுப்பிவைத்தது. அப் போராட்டத்தின் வெற்றியே ஐரோப்பாவில் சமூக நல அரசுகளின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று. வியட்னாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டங்களின் வெம்மையால் அந்த நாட்டிலிருந்து அமெரிக்க அரசு தனது இராணுவத்தை விலக்கிக் கொள்ளக் காரணமாயிற்று.

அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளதும் ஆதரவுடன் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் குண்டுமழை பொழியும் போது ஐரோப்பாவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களால் தான் இன்று வரை பாலஸ்தீனம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படாமல் தப்பித்திருக்கிறது. இலங்கையின் வடக்குக் கிழக்கினைப் போன்றே இந்தியாவின் காஷ்மீரும் உலகில் அதிகமாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் வரிசையில் சேர்க்கப்படுகின்றது. காஷ்மீர் மக்களின் நாளாந்த மக்கள் போராட்டங்கள் இன்று இராணுவத்திற்கு எதிரான தற்காப்பு யுத்தமாக விரிவடைந்துள்ளது.

தென்னாபிரிக்க வெள்ளை நிறவாதச் சிறுபான்மை அரசுக்கு எதிராக இங்கிலாந்திலும் தென்னாபிரிக்காவிலும் நடைபெற்ற போராட்டங்களே அந்த நாட்டின் விடுதலைக்கு ஆதார சக்தியாக அமைந்திருந்தது. 1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்து சென்றதற்கு அடி நாதமாக அமைந்தது சுவீடிஷ் தொழிலாளர்களின் நோர்வே மக்களுக்கு ஆதரவான போராட்டங்களே. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ரஷ்யத் தொழிற்சங்கங்களின் போராட்டங்களே அதே ஆண்டில் அங்கு ஜனநாயகப் புரட்சி ஏற்படக் காரணமாயிற்று.

இரண்டாம் உலகப் போரை வெற்றிகொள்ள அமெரிக்க இராணுவத்தை வழி நடத்தியவர் என அமெரிக்க மக்களால் போற்றப்படுவர் ஐந்து நட்சத்திர அமெரிக்க இராணுவத் தளபதி டக்ளஸ் மக் ஆர்தர். உலகத்தைத் தனது காலடியில் உட்காரவைத்த போது அமெரிக்காவின் கதானாயகனாகப் போற்றப்பட்ட டக்ளஸ் மக் ஆர்தர் வியட்னாமிய மக்களின் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் தனது படையுடன் பின் வாங்கிய போது அப்போதைய ஜனாதிபதி ஜோன். எப். கெனடியினால் வலுவிழந்த பழைமைவாதி என விமர்சனம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலளித்த மக் ஆர்தர் மக்களின் எழுச்சிக்கு முன்னால் யுத்தம் புரியும் தந்திரம் தனக்குத் தெரியாது என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலமளித்தார்.

சிறந்த முறைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்தின் வெளிப்பாடுகள் எத்தகைய வினைத்திறனைக் கொண்டிருக்கும் என்பதற்கு மேற்கூறப்பட்டவை சிறந்த உதாரணங்களாகும்.
உலகம் முழுவதிலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் வலிமையின் பின் புலத்தில் உறுதியான மக்கள் சார்ந்த அரசியலும் சமூகப் பற்றுமிக்க தலைமைகளும் இருந்திருக்கின்றன. என்பது வெளிப்படை. இந்தப் போராட்டங்கள் கூட்டு முயற்சிகளாலும் அர்ப்பணிப்புக்கள் மிக்கவையாகவும் பொது நலன் என்ற ஒன்றே குறிக்கோளாகவும் முக்கியமாகத் தனிநபர் நலன்களைப் புறந்தள்ளியமையாகவும் கொண்டமைந்தமைந்திருந்தமையாலே இப்போராட்டங்கள் சாத்தியமாக அமைந்தன என்பது யாவருக்கும் தெரிந்த வெளிப்படையான ஒரு விடயம்.

இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லீம் மற்றும் மலையக மக்களும் கூட வெகுஜனப் போராட்டத்தில் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். அறுபதுகளின் ஆரம்பத்தில் சண்முகதாசன் தலைமைவகித்த கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்திய சாதீய எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக மாறும் அளவிற்கு வளர்ந்து சென்றது. சாதீய ஒடுக்குமுறையின் கொடுமை யாழ்ப்பாணத்தில் தணிந்துபோகுமளவிற்கு அதன் தாக்கம் அமைந்திருந்தது. மலையகத்தில் நடைபெற்ற சிவனு லட்சுமணன் போராட்டம் அங்கு தேசிய இன ஒடுக்குமுறையை தற்காலிகமாகவேனும் தணித்திருந்தது. தெற்கிலும் இவ்வாறான போராட்டங்களுக்கான உதாரணங்களை காணலாம்.

2009களில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மக்கள் போராட்டங்களிற்கான தேவையென்பது அதிகரித்துள்ளது என்பது நிதர்சனமாகும். இலங்கைப் பேரினவாதிகளின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் முடிவிற்கு வந்த பின்னர் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு அரசியலின் தேவை மக்களால் உணரப்படுகின்றது. அதுவே மக்களின் தன்னிச்சையான எழுச்சிகளாக தற்போது வெளிப்பட்டு வருகின்றது. இங்கே ஒரு விடயத்தை உற்றுப் பார்த்தால், எந்த விதமான அரசியல் பின்புலங்களுமின்றி மக்கள் அமைப்புக்கள் தமது போராட்டங்களை முன்னெடுக்கையில் அவை வினைத்திறன் வாய்ந்ததாக அமைகின்றன என்பது மறுக்கமுடியாத விடயம்.

அந்த வகையில் இலங்கையின் வடக்குப் பகுதியினைப் பொறுத்தவரையில் சமீபத்தில் அநீதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான வெகுஜனப் போராட்டமாக சுன்னாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த நொதேர்ண் பவர் மின் வழங்கும் நிலையத்தினை மூடியமையினை நாங்கள் பார்க்கலாம். வலிகாமம் பகுதியில் நீலக்கீழ் நீரை வேகமாக மாசடையச் செய்துவரும் தனியாருக்குச் சொந்தமான சுன்னாகம் நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு மூடுவிழா நடாத்தியமை என்பது தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள் மூலமாகவே சாத்தியமாயிற்று.

ஆனாலும் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் புலங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்கள் அமைப்புக்களையும் அவை சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களையும் உற்று நோக்கினால் அவற்றில் பெரும்பாலானவை உறங்கு நிலைகளில் காணப்படுகின்றனவாகவும் அரசியல் கட்சிகளால் இயக்கப்படுகின்றனவாகவும் காணப்படுகின்றன. அவ் அரசியல் கட்சிகள் தமது சுயலாபம் கருதிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இவ் மக்கள் அமைப்புக்களைப் பயன்படுத்துவதும் இவ் அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் இத்தகைய அரசியல் கட்சிகளுக்கு பாதமாக அமையும் பட்சத்தில் அப் போராட்டங்களை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் ஒரு சாதாரண விடயமாக இங்கு கருதப்படுகின்றது.

அதாவது மக்கள் அமைப்புக்கள் எனப்படும் கட்டமைப்புக்கள் எப்பொழுதும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்தியலானது எழுதப்படாத விதியாகவே இங்கு கருதப்படுகின்றது. அரசியல் கட்சிகளால் ஒழுங்கமைப்படும் தனி நபர் மற்றும் கட்சிகளது இருப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பன மக்கள் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்றன என வெளி உலகத்திற்குப் பறை சாற்றப்படுகின்றது.

இங்கே மக்கள் போராட்டங்களை அரசியல் கட்சிகள் வழி நடத்துவதாகவும், தலைமை ஏற்பதாகவும் கூறிக்கொண்டு அவற்றைச் சிதைக்கும் தன்மையினைக் காணக்கூடியதாகவுள்ளது. முன்னும் பின்னும் தொடர்சியைக் கொண்ட மக்களை அணிதிரட்டுவதன் ஊடான எழுச்சிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அடுத்த தேர்தலில் தமது வாக்கு வங்கியை நிரப்பிகொள்வதற்கான கருவியாகவே வெகுஜனப் போராட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனி நபர்கள் தம்மை முன் நிறுத்திக்கொள்வதற்கும், அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மக்களின் அவலங்களின் வெளிப்பாடான எழுச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெகுஜனப் போராட்டங்கள் பரந்துபட்ட மக்கள் இயக்கங்களாக பரிணமிப்பதற்குப் பதிலாக அவை குறுகிய நோக்கங்களுக்காப் பயன்படுத்தப்படுகின்றன என்பது அரசியல் அழிவை ஆழப்படுத்துகின்றது.

நமது இன்றைய காலத்தின் தேவை மக்கள் போராட்டங்களே எனினும் மக்கள் மீது பற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் இல்லை என்பதால் அப் போராட்டங்கள் தொடர்ச்சியான வழி நடத்தலுக்கு உட்படுவதில்லை. எங்காவது மக்கள் போராட்டம் நடைபெறும் சாத்தியங்கள் தென்பட்டால் கூட அதனைத் தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையே அரசியல் கட்சிகள் சிந்திக்கத் தொடங்கிகின்றன. அதனால் அப் போராட்டங்களை எழுச்சியை நோக்கி வளர்த்தெடுக்காது முடக்கி தமது கட்டுப்பாட்டினுள் கட்சிகள் வைத்துக்கொள்கின்றன.

யுத்த முடிவிற்குப் பின்னர் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்காக காலத்திற்குக் காலம் ஒரு சில மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலம் அதற்கான நோக்கங்கள் எட்டப்பட்டனவா என்று பார்த்தால் எதிர்மறையான பதில் தான் வெளிப்படையாகத் தெரியும். மக்களை வீதிக்கு இறக்கிப் போராட வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறுவார்கள். ஆனால் அந்தப் போராட்டம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இதன் தொடர்ச்சி என்ன என்பதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. மக்களுக்காகவே அரசியல் கட்சிகள் என்ற நிலை போய் அரசியல் கட்சிகளின் இருப்பிற்காகவே மக்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அமைப்புக்களும் போராட்டங்களும் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

மக்கள் போராட்டங்கள் ஊடாக அவர்களை அணிதிரட்டுவதே நாளைய அரசியல் தலைமையைத் தோற்றுவிக்கும் நுழைவாசல். அதுவே எம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொள்ளும் பாதுகாப்பு அரண். மக்கள் போராட்டங்கள் ஊடாகவே அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும். அதனூடாகவே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்க முடியும். உண்மையான ஜனநாயகமும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திரமான வாழ்க்கையும் அமைவதற்கு மக்கள் போராட்டங்களே வழிகளைத் திறந்துவிடும். இன்று அப்போராட்டங்களைத் தமது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தும் வாக்கு வங்கி அரசியல் கட்சிகளுக்கு அப்பால் சமூகப் பற்றுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு அணிகள் தமக்கு இடையேயான குறைந்தபட்ச முரண்பாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும். இலங்கை அரசின் சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைகளும் பேரினவாத ஒடுக்குமுறையும் நாளாந்தம் உச்சமடைந்து செல்லும் நிலையில் அவற்றிற்கு எதிரான உறுதியான அரசியல் தலைமையைக் கட்டியெழுப்பவும் அவற்றிற்கு எதிரான பாதுகாப்பு அரணாக அமையவும் மக்கள் போராட்டங்கள் சரியான திசை வழியை நோக்கிச் செல்ல வேண்டும்.

2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மருத்துவத் தாதிகளின் போராட்டத்தில் ஆரம்பித்து வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட பல மக்கள் எழுச்சிப் போராட்டங்களைக் காணக் கூடியதாக இருந்திருப்பினும் அவை மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகளால் வழி நடத்தப்படாமையால் அவற்றின் பெறுமானம் முழுமையாக வெளிப்பட்டிருக்கவில்லை. . தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் வெறிச்சோடிக் காணப்படும் அரசியல் தலைமையின் வெற்றிடம் இப் போராட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படக் காரணமாயிற்று. தமிழீழ விடுதலைப் புலிகள் நிரப்பிக்கொண்டிருந்த அரசியல் தலைமை இனக்கொலையாளிகளால் வேரறுக்கப்பட்ட பின்னர் தோன்றிய வெற்றிடம் வெகுஜனப் போராட்டங்களால் நிரப்பப்படவில்லை என்பது கண்கூடானது.

வெகுஜனப் போராட்டங்கள் எனப்படுவது வெறுமனே சொல்லாடல்களையும் கோஷங்களையும் கொண்டிருக்காமல் எந்த நோக்கத்திற்காக அந்தப் போராட்டங்கள முன்னெடுக்கப்படுகின்றனவோ அந்த இலக்கினை எட்டுவதனை மட்டுமன்றி அவை மக்களை அணிதிரட்டும் ஊக்கிகளாகவும் பயன்படுத்தபட வேண்டும். எந்த சக்திகளுக்கெதிராக அந்தப் போராட்டங்கள் நடாத்தப்படுகிறதோ அந்த எதிரான சக்திகள் மீது வினைத்திறன் வாய்ந்த தாக்கத்தினைப் பிரயோகிப்பதாக அமைய வேண்டும். பாராளுமன்ற வாக்குகள் போன்ற சுயலாப நோக்கத்திற்கு மக்களைக் கட்சி பயன்படுத்துவதற்கு அப்பால் மக்கள் கட்சியைக் கண்காணிக்கும் அளவிற்கு அவர்கள் உறுதியாக அணிதிரட்டப்பட வேண்டும்.

மக்கள் அமைப்புக்கள் மக்களுக்கானவை. மக்கள் நலன் சார்ந்தவை. அந்த மக்கள் அமைப்புக்கள் மக்கள் தலைமைகளால் வழி நடாத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்களில் சுயாதீனத் தன்மை பேணப்பட வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிகளின் சாயம் இந்த மக்கள் அமைப்புகள் மீது பூசப்படக் கூடாது என்பதில் இவ்வமைப்புக்கள் மிக்க உறுதியுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளினால் மக்கள் அமைப்புக்கள் கையாளப்படுகின்றன என்ற நிலைமை மாறி மக்கள் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன என்ற நிலை ஏற்பட வேண்டும். அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக பெரியதொரு மாற்றமானது மக்கள் அமைப்புக்களின் கூட்டிணைவால் மாத்திரமே சாத்தியமாகும். ஆகவே மக்கள் அமைப்புக்கள் தங்களது சமூகம் சார்ந்த பாரிய பொறுப்புணர்வை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்பது காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.
நன்றி,
தினக்குரல் – ஞாயிறு (04.09.2016)