மோடி இன்று சென்னை வருகை – அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

212 0

தமிழகத்தில் பணிபுரியும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்கிக்கொள்ள மானியம் வழங்கும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு வந்து இறங்குகிறார்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் கார் மூலம் கலைவாணர் அரங்கம் வருகிறார் மோடி. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் “அம்மா ஸ்கூட்டர் திட்டம்” தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

விழாவில் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கும் மோடி, அங்கு நடைபெறும் மரக்கன்று நடும் விழாவிலும் கலந்து கொண்டு மரக்கன்று நடுகிறார்.

விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

விழா முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகை சென்று அங்கு இரவு தங்கும் மோடி, நாளை காலை விமானம் மூலம் புதுச்சேரி செல்கிறார்.  அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியானம் செய்கிறார். பின்னர் ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழா நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலையில் விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை, புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a comment