எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் – இந்தியர்களுக்கு பாதிப்பு

220 0

‘எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வந்து உள்ளது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது.

2019-ம் நிதி ஆண்டுக்கான ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதற்கு அமெரிக்கா வரும் ஏப்ரல் 2-ந் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற உள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.

அந்த வகையில் இப்போது ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்து உள்ளது.

இந்த கொள்கையினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூன்றாம் நபரின் பணி இடங்களில் (தேர்ட் பார்ட்டி வொர்க் சைட்ஸ்) வேலை செய்யப்போகிறவர்களுக்கு விசா பெறுவது கடுமையாகிறது.

நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மூன்றாம் நபரின் பணி இடங்களில் வேலை செய்வதற்கு விசா கேட்டு விண்ணப்பிக்கிறபோது, கெடுபிடிகள் அதிகமாகிறது.

அதாவது, ஊழியர்களின் கல்வித்தகுதி, அவர்களுக்கு வழங்கப்படும் பணி, வேலைத்திறன் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை குறிப்பிட்டும், அதற்கான சான்று ஆவணங்களையும் இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்து, இதுவரை ‘எச்-1 பி’ விசா ஒரே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இனி மூன்றாம் நபரின் பணி இடங்களில் வேலை பார்க்கும் காலம் வரை மட்டுமே வழங்கப்படும். அதாவது 3 ஆண்டுக்கு குறைவான காலகட்டத்துக்குத்தான் வழங்கப்படும்.

‘எச்-1 பி’ விசா நீட்டிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து உள்ள நிலையில், இப்போது ‘எச்-1 பி’ விசா வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருப்பது, அமெரிக்காவின் நலனையொட்டித்தான் என தகவல்கள் கூறுகின்றன.

‘எச்-1 பி’ விசா பெறுவதில் இப்போது கொண்டுவரப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான், தங்களது ஊழியர்களை அமெரிக்காவில் மூன்றாம் நபரின் பணி இடங்களில் பணி அமர்த்துகிறது.

அமெரிக்காவில் வங்கிகள், பயண நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தங்கள் பணிகளை இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பணி அமர்த்தப்பட்டு உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களைக் கொண்டுதான் செய்து முடிக்கின்றன. எனவேதான் இந்தியர்களுக்கு இந்த விசா கட்டுப்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a comment