கமல்ஹாசனை மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன்

218 0

தமிழக மக்கள் கமல்ஹாசனை நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டி வருமாறு:-

கமலின் பேச்சு அம்மா மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இதயதெய்வம் அம்மாவின் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அந்த நேரத்தில் விஸ்வரூபம் படம் வந்த போது, உணர்ச்சி வசப்பட்டு, என்னால் இந்தியாவிலேயே இருக்க முடியாது வெளிநாட்டிற்கு போய்விடுவேன் என்று கமல் சொன்னார்.

ஒரு படத்திற்கு வந்த எதிர்ப்பையே தாங்கிக் கொள்ள முடியாத கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

அ.தி.மு.க. இயக்கங்களில் பெரிய கட்சி இது. இங்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளார்கள். இந்த கட்சியை வேண்டாம் என்று கமல்ஹாசன் சொல்வது, கட்சியை எதிர்க்கிறேன் என்று சொல்வது ஒரு காழ்ப்புணர்ச்சியாகத்தான் இருக்கிறது.

அதாவது எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கிறேன் என்று சொன்னால் அதற்கு அவர் காரணங்களை சொல்லலாம். அது வேறு.

அம்மாவின் கட்சியை விரும்பவில்லை, நான் எதிர்க்கிறேன் என்று கமல் சொன்னால் அது அவருடைய காழ்ப்புணர்ச்சியையும், அம்மா மீது வைத்திருக்கிற பகைமையையும் தான் காட்டுகிறது.

அம்மா விஸ்வரூபம் படப்பிரச்சனையில் ரொம்பவும் மக்களின் சார்பாக கையாண்டு திரைப்படத்தை வெளியிட உதவி செய்தார்கள்.

அந்த சமயத்தில் கமல்ஹாசன் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசினார். வெளிநாடு செல்லப் போகிறேன் என்றெல்லாம் சொன்னார்.

அம்மா மீது ரொம்ப நாளாக ஒரு கோபம் இருந்ததாக தெரிகிறது. அந்த கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவின் தொண்டர்கள் நிச்சயம் விடமாட்டார்கள்.

கமல்ஹாசன் என்னதான் பேசினாலும் இறுதியாக மக்களிடம்தான் சென்று நிற்க வேண்டும். மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு.

அதனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? என்று விரைவில் தெரிய வரும். நிச்சயம் தமிழக மக்கள் அவரை புறக்கணிப்பார்கள்.

கமல்ஹாசன் என்ன பேசுகிறார் என்று அவருடைய தமிழ் இருக்கிறதே அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு பெரிய ஆற்றல் கிடையாது. நான் சராசரி மனிதன் தான். அவர் பேசும் தமிழ் எனக்கு புரியவில்லை.

மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பது தேர்தலில் தான் தெரியவரும். ரசிகர்கள், பொதுமக்கள் பார்க்க வரலாம். அதை வைத்து தேர்தலில் வென்று விட முடியுமா?

வருங்காலத்தில் தேர்தல் வரும்போது எந்த கட்சி சிறந்த கட்சி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment