ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் – கமல்ஹாசன்

268 0

அப்துல் கலாம் வீட்டில் தனத அரசியல் பயணத்தை துவக்கிய கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான், இனி அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் என்றார். 

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலுக்கு சென்றார். அங்கு மண்டபம் மீனவர்கள் மத்தியில் பேசினார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றதும், அவரது வீட்டில் தனது அரசியல் பயணத்தை துவங்கியதிலும் எந்த அரசியலும் இல்லை. நான் கலாம் பள்ளிக்கு செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர, நான் கல்வி கற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய கமல், நான் படித்த பாடத்தில் ஒருபகுதி அப்துல்கலாமின் வாழ்க்கை தான் என்றார்.
அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது குறித்து நிருபர்கள் கேட்ட போது, நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்காததற்கு என்னுடைய நம்பிக்கை தான் காரணம் என்றார்.
பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் உரையாடி வருகிறேன், நேற்று கூட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கொள்கையை பற்றி கவலைப்படுவதைவிட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பைத சிந்திக்க வேண்டும் என்றார்.
எனவே மதுரையில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் என் கொள்கைகள் புரியும்படி பேசுவேன். அரசியலுக்கு வர தொழில் முக்கியமில்லை, உணர்வும், உத்வேகமும் இருக்கும் அனைவருமே அரசியலுக்கு வரலாம். இதுவரை ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் இனி அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் என்றார்.

Leave a comment