அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

271 0

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் என்று கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

37 ஆண்டுகளாக நற்பணி செய்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டமைப்புக்கான அஸ்திவாரம் எங்களுக்கும் உள்ளது. அதைப் பலப்படுத்த வேண்டும்.

ஆனால், இருப்பவர்களை உற்சாகப்படுத்திச் செயலாற்றப் பணிக்கிறோம். பலரைப் புதிதாக இணைக்கிறோம். ஆனால், ‘இன்னும் பள்ளமே தோண்டலையே’ என்று பேசுவது சரியானதல்ல.

எங்கள் கோபங்களைச் சொல்ல இது நேரமல்ல. இருந்தாலும், கேட்பதால் சொல்கிறேன். நற்பணி செய்வதற்கான தண்டனைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.

வெள்ளைக்காரன் ஆட்சியில் காந்தியார் நற்பணி செய்ய சிரமப்பட்டார் என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இது என் குடி, என் அரசு. இங்கேயே நாங்கள் நிறைய அனுபவித்துள்ளோம்.

உதாரணத்துக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஓர் அமைச்சரை அவமானப்படுத்தி விட்டார் என்று சொல்லி புதுக்காட்டையைச் சேர்ந்த எங்கள் நற்பணி இயக்க இளைஞர் ஒருவரை கைது செய்தார்கள். எங்கள் வக்கீல்கள் அனைவரும் போய் அவரை விடுவித்தனர்.

அப்போதுதான், நற்பணி இயக்கத்தினரை அழைத்து ‘நம் மன்றத்தில் வழக்குரைஞர்களை அதிகப்படுத்துங்கள். இல்லையென்றால் இன்னும் தொந்தரவு செய்வார்கள்’ என்றேன். இன்று 250 வழக்குரைஞர்கள் எங்கள் மன்றத்தில் இருக்கிறார்கள்.

ஒரு நிர்வாகியின் மனைவியிடம், ‘ஏம்மா, உன் புரு‌ஷன்கிட்ட சொல்லும்மா. எதுக்குமா இது, எத்தனை பவுன் தாலி?’ என்று ஒரு போலீஸ்காரர் கேட்டிருக்கிறார்.

ஆர்வம் காரணமாக எங்களுக்கு உதவி செய்யும் கலைஞர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறார்கள். அலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார்கள். அவர்கள் யார்-யார்? என்று பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இப்படி வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு வார்த்தைகளில் இதெல்லாம் நடக்க ஆரம்பித்து வெகு நாள்கள் ஆகிவிட்டன. இவை இன்னும் வலுக்கும் என்பதும் எனக்குத் தெரியும். இவை நியாயமில்லைதான்.

‘இப்படியெல்லாம் பண்ணிட்டாங்க’ என்று அழுது புலம்பிச் சொல்லாமல், காலம் வரும்போது சிரித்துக் கொண்டே சொல்ல வேண்டிய வி‌ஷயங்கள் இவை. ஆனால், அப்படிச் சொல்லிச் சொல்லி இன்று வெற்றிலை, பாக்கு வைத்து கட்சியின் மாநாட்டுக்கு அழைக்கும் அரசியலுக்கு எங்களை வரவழைத்து விட்டார்கள்.

ஒரு கிராமத்தை தத்தெடுக்கச் சென்றால், தகவல் அறிந்து கலெக்டர் நேரில் சென்று அந்த கிராமத்தினருடன் பேசுகிறார். இது நியாயமானது என்பேன்.

‘அப்படியா? கமல் செய்கிறாரா… அவருக்கு முன் நாம் செய்வோம்’ என்றால் என் வேலை முடிந்ததாகத்தானே அர்த்தம். ஒரே ஒரு வி‌ஷயத்தை மட்டும் பதிவு செய்கிறேன். என் அரசியல் பாதை, பயணம் எனக்குப் பயமாக இல்லை. இது அசட்டுத் தைரியம் கிடையாது.

அ.தி.மு.க.வில் நல்லவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்து ஒதுங்கி நிற்கிறார்கள். அடிக்கடி கட்சி ஆபீசுக்கு வருபவர்கள் கூட, இன்று எப்போதாவது ஒருமுறை வந்து எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து கும்பிட்டுச் செல்பவர்களாக மாறியிருக்கிறார்கள்.

பேனர்களில் எம்.ஜி.ஆர். படம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்குவது அவர்களுக்கு தெரியாதா என்ன? அரசியலுக்காக நிறுவனரையே மறப்பவர்கள் இவர்கள். நல்லவர்கள் வந்தால் இணைத்துக் கொள்வோம்.

ஏற்கனவே ஒரு கலெக்டர் வந்துவிட்டார். என்னுடன்தான் இருக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் சேர்ந்திருக்கிறார். ‘உங்களுக்கு இன்ன பொறுப்பு’ என்றும் அவருக்குச் சொல்லி விட்டேன்.

இதே போல், இந்நாள், முன்னாள் நீதிபதிகள், சினிமா நண்பர்கள் என்று கிடுகிடுவென என்னால் இப்போது பெயர்களைச் சொல்ல முடியும். ஆனால், மாநாட்டு மேடையில் சொன்னால், அதற்கான சுவாரஸ்யம் கூடும் என்பதற்காக காத்திருக்கிறேன. இப்படி பல துறைகளைச் சேர்ந்த நல்லவர்களைச் சேர்த்துக் கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் நிலை, நிலவரம், பலம் எல்லாம் பார்க்க வேண்டும். சமீபகாலமாக கவர்னர் ஒத்திகை பார்ப்பதைப் பார்த்தால் அவரும் வருவார் போலிருக்கிறது. அதையெல்லாம் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும். இறங்கிட்டோம்.

பொறுமையாக இருந்து பார்க்கலாம். என்பதெல்லாம் கிடையாது. ‘பொறுத்தது போதும், பொங்கியெழு’ என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. ஆனால், அப்படிப் பொங்குவதில் வேகம் மட்டும் இருந்து விவேகம் இல்லாமல் போய்விடக் கூடாது. நல்ல கைகள் இணையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment