அரசியல் குழப்பம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

226 0

உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை நாட்டை ஸ்திரமற்ற நிலைமையில் இருந்து பாதுகாக்க தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பயணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியமைக்கு அமைவாக தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் இருந்து  பயணிக்க தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என சுதந்திரக் கட்சியினரான நாம் கோரியது உண்மையாகும். அதற்கான பேச்சுவார்த்தைகளையும் நாம் நடத்தினோம். இதன்போது தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக முடியுமா என்றும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானித்தார்.

எனினும் தேசிய அரசாங்கமொன்று இருப்பதனால் இதற்கு தீர்ப்பு வழங்குவது கடினமாகும். ஆகவே உயர் நீதிமன்றத்தினை நாடி இது தொடர்பில் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள் என சட்டமாஅதிபர் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதன்படி நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாகவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பெறவுள்ளதாகவும் நான் அறிவித்தேன். இதன்படி நேற்று பகல் நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்தித்தோம். நாடு தற்போது ஸ்திரமற்ற நிலைமையில் உள்ளது.

2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியுள்ளது. ஆகவே உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்குமாறு ஜனாதிபதி கோரினார்.

இதன்படி தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க நாம் தீர்மானித்துள்ளோம் என்றார்.

Leave a comment