சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா

449 0

1472474141-3133தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன். இதற்காகச் சேரனை விமர்சித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், நம்மை நாமே சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கிக் கொள்வதுதான் முக்கியம் என்று தோன்றுகிறது எனக்கு!விடுதலைப் போராட்டங்களிலும், இன அழிப்புக்கு எதிரான போராட்டங்களிலும் புற ஆதரவு தேவைப்படுவது தவிர்க்க முடியாதது. கையறுநிலையில், அதுதான் யதார்த்தம். என்றாலும், சந்தர்ப்பவாதிகள் ஆதரவளிக்க முற்படுகிற தருணங்களில், தமிழினம் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு சேரன் மிகச் சரியான முன்னுதாரணம்.

ஒரு வெப்பப் பிரதேசத்திலிருந்து குளிர்ப் பிரதேசங்களில் வந்து வீழ்ந்தவர்கள் நாம். என்றாலும், கொட்டுகிற பனியிலும் விடுதலை நெருப்பை உள்ளுக்குள் சுமந்து கொண்டிருக்கிறோம். நமது தனிப்பட்ட கனவுகளையும் உணவுகளையும் புறந்தள்ளிவிட்டு, விடுதலை உணர்வை மட்டுமே தாங்கித் திரிந்து கொண்டிருக்கிறோம். எமது காலத்திலேயே ஈழம் மலரும் – என்கிற நம்பிக்கையை எள்ளளவும் இழக்காமல், இயங்கிக் கொண்டிருக்கிறோம். நட்புக்கரம் நீட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நமக்கிருக்கும் இந்த ஓர்மம் இருக்கும் என்று நம்புவதோ, இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அறிவுடைமையல்ல!

இனிவரும் காலங்களில் கூட, புற ஆதரவு தேவைப்படுகிற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். புலத்திலிருந்து போராடுகிற நாம், புறத்திலிருந்து கைகொடுக்கிற ஆதரவாளர்களின் அடிப்படைத் தகுதிகள் குறித்து ஆராய்ந்த பிறகே, எந்த ஆதரவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில், நமக்கு ஆதரவளித்ததாகக் கூறும் சேரன் மீது எந்தப் பிழையுமில்லை. அவர் அளித்தது ஆதரவுதான் என்று நம்பிய நம் மீதுதான் பிழையிருக்கிறது.

2009ல் சேரன் என்னென்ன விதத்தில் எமக்காகப் போராடினார் என்றோ, எமக்காக அவர் எதையெதை இழந்தார் என்றோ, நான் ஆராய்ச்சி செய்யப் போவதில்லை. அவருடைய ஆதரவென்பது மேடைகளில் நான்கு வார்த்தை பேசியது மட்டும்தானா – என்று கிண்டலடிக்கப் போவதில்லை. இனப்படுகொலைக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாடு நடத்தப் போவதாக நண்பர்களைக் கூட்டி அறிவித்தவர், அப்படியொரு மாநாட்டை நடத்தவே நடத்தாதது ஏன் என்று கேட்கப் போவதுமில்லை. சேரன் விஷயத்தில் எனக்கிருக்கிற வருத்தம் வேறு.

தமிழ்த் திரையுலகத்தை சீரழித்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழர்கள் தான் – என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிற சேரன், தமிழ்ச் சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்றியது ஈழத் தமிழர்கள்தான் – என்கிற வரலாற்று உண்மையை ஏன் மூடிமறைக்கிறார்? வரலாற்றை மறைக்கும் இந்த அயோக்கியத்தனம்தான், சேரன் குறித்த எனது வருத்தத்துக்குக் காரணம்.இதுகுறித்து, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய கட்டுரை ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்த கட்டுரையின் நேர்மையான பார்வை, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன், திருட்டு வீடியோவால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனதையும், பெரிய நடிகர்களின் பட வசூலைக் கூட அது கடுமையாகப் பாதித்ததையும், பெரிய படங்கள் கூட அதனால் படுதோல்வி அடைந்ததையும், கடும் இழப்புக்குத் தயாரிப்பாளர்கள் ஆளானதையும் புகழேந்தி அதில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் நில்லாது, அந்த இழப்பு எப்படி ஈடுசெய்யப்பட்டது என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

“போட்ட முதலீட்டையே எடுக்க முடியாமல் தமிழ்த் திரைப்படத் துறை தடுமாறிய அந்த நிலையில்தான், உலகம் முழுக்கக் குடியமர்ந்த ஈழத் தமிழ் உறவுகள், தமிழ்ச் சினிமாவைத் தாங்கிக் கொண்டனர். அதற்குமுன், தமிழ்ச் சினிமாவின் வெளிநாட்டு வியாபாரம் என்பது, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உரிமைகள் தான். புலம்பெயர்ந்த உறவுகள், அந்தச் சந்தைகளுக்கும் அப்பால், தமிழ்ச் சினிமாவின் புதிய சந்தைகளை உருவாக்கினர். அந்தச் சந்தைகள் மூலம் நடந்த புதிய வர்த்தகத்தால், தமிழ்ச் சினிமாவுக்குப் புத்துயிர் கிடைத்தது. காலப்போக்கில், பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையையும், புலம்பெயர்ந்த நாடுகளின் வர்த்தகத்தின் மூலமே திரும்ப எடுத்துவிடும் அளவுக்கு அந்த வியாபாரம் பெருகியது” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்திருந்தார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

‘தமிழ்ச் சினிமாவுக்குப் புத்துயிர் கொடுத்த புலம்பெயர் தமிழர்களின் உறவுகள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள். தமிழ்ச் சினிமாவைக் காப்பாற்றிய உறவுகளுக்கு நன்றி பாராட்டுவதற்காகவாவது, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்க, தமிழ்த் திரையுலகம் முன்வர வேண்டாமா’ என்கிற நியாயமான கேள்வியையும் அந்தக் கட்டுரையின் வாயிலாக எழுப்பியிருந்தார் புகழேந்தி தங்கராஜ்.சேரன் போன்ற நண்பர்கள், புகழேந்தி தங்கராஜ் எழுதியதைத் தேடிப்பிடித்துப் படித்துப் பார்க்க வேண்டும். உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத் தமிழர்களைக் காட்டிலும், புலம்பெயர் நாடுகளில் குடியமர்ந்திருக்கும் ஈழத் தமிழர்களாகிய எமக்கு, சர்வதேசத் தரம் வாய்ந்த மிகப் பிரமாண்டமான சினிமாக்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகம். அப்படியிருந்தும், எங்களது உறவுகளான தமிழ்நாட்டுக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான திரைப்படைப்புகளைத் தான் தேடித்தேடிப் பார்த்து வருகிறோம். தமிழ் நாட்டிலிருந்து வருகிற திரைப்படங்கள் சர்வதேசத் தரத்துடன் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை நாங்கள். எம் தமிழரின் உழைப்பில் உருவாகிய படங்கள் – என்கிற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிறோம்… அவ்வளவுதான்! சேரன் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகில் இருக்கும் படைப்பாளிகள் அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவில், சேரன் ஒரு அற்புதமான படைப்பாளி. அவரது பாண்டவர் பூமி, தாயக மண்ணுக்கான எங்கள் கனவைப் பிரதிபலித்தது. அவரது பொற்காலம், தமிழ்ச் சினிமாவின் பொற்காலமாகப் பளபளத்தது. அதையெல்லாம் மறந்துவிட்டு, சேரன் என்கிற கலைஞனைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை. என்றாலும், எங்களது பிரதிபலன் கருதாத பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் சேரன் போன்றவர்கள் செய்கிற கைமாறு எங்களைக் கவலைக்குள்ளாக்குகிறது. அதை என்னால் மறைக்க முடியவில்லை.

சேரனின் மீது இப்போது கூட நாங்கள் கோபப்படவில்லை. எந்தச் சூழலில் அவர் அப்படிப் பேசினார் என்பதைப் புரிந்துகொள்ளவே விழைகிறோம். நேர்மையுடனும் துணிவுடனும், திருட்டு டி.வி.டி.க்குக் காரணமானவர் என்று தான் கருதுகிறவரின் பெயரை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, ஓர் இனத்தின் முதுகில் குத்த முயல்வது நியாயமில்லை.

விடுதலைக்குப் போராடுகிற ஓர் இனத்துக்கு, தன்மீது எறியப்படுகிற கல்லைக்கூட மலராகக் கருதும் சமநிலை மனநிலை மிக மிக அவசியம். கல்லெறிகிற சேரன், ஒரு சாதாரண மனிதருமல்ல…. ஓர் அரிய இயக்குநர், யதார்த்தமான நடிகர். அவர் எறிவது காகிதக் கல். குறைந்தபட்சம், அதை ஒரு காகிதப் பூவாகவேனும் மாற்ற நம்மால் இயலும். அதை விட்டு விட்டுத் திருப்பியடிக்க முயல்வது, நாகரிகமல்ல! என்றோ எப்போதோ நமக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஒரு நண்பனை, எந்தக் காலத்திலும் நாம் அவமதித்துவிடக் கூடாது.

தமிழ்ப் பற்றுடன்
ஸ்ரிவன் புஸ்பராஜா