உள்ளுராட்சி சபைத்தேர்தல் அமைதிப்புயலா?

391 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய அளவிற்கு இடம்பெறவில்லை. ஆங்காங்கே மட்டும் சில இடம்பெற்றன. அவை தேர்தல் முடிவுகளில் பெரியளவில் தாக்கங்களை செலுத்தவில்லை. இது விடயத்தில் தேர்தல் ஆணையாளரை பாராட்டியே ஆகவேண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாடு முழுவதும் ஒரே நாளில் நடாத்துவது இலகுவான ஒன்றல்ல.

இத்தேர்தல் உள்ளூர் மட்டத் தேர்தலாக இருந்த போதும் நடைமுறையில் அதனை மட்டும் தீர்மானித்தாக இருக்கவில்லை. சர்வதேச, இலங்கை மட்ட, தமிழர் தாயக மட்ட அரசியலைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருந்தது. தேர்தல் பிரச்சாரங்களில் கூட உள்ளூர் மட்ட விவகாரங்கள் மைய விடயங்களாக இல்லாமல் ஓர்விடயங்களாகவே இருந்தன. சில அரசியல் விவகாரங்கள் முனைப்புப் பெற்றிருக்கும் போது அவை தேர்தல்களில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததே!

இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை சர்வதேச பிராந்திய மட்டத்தில் இந்திய-அமெரிக்கச் சக்திகளின் ஆதிக்கமா? சீனாவின் ஆதிக்கமா? இலங்கைத் தீவில் முன்னிலை பெற்றிருப்பது என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தது. ஏற்கனவே இடம்பெற்ற ஆட்சி மாற்றம் கூட சீனாவின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டதுதான் ஆனாலும் இலங்கையின் களயதார்த்தம் இந்திய-அமெரிக்க சக்திகள் நினைத்தது போல சீனாவை தூரவிலக்கி வைப்பதை சாத்தியமாக்கவில்லை. சீனா இலங்கையில் ஆழமாக ஏற்கனவே வேரூன்றிவிட்டது. இந்தச் சக்திகளினால் அவ்வப்போது சில தடுப்புக்கள் மட்டும் போட முடிந்தது. இது விடயத்தில் மிகவும் சங்கடப்பட்டது இந்தியாதான்.

அமெரிக்கத்தலையிலான மேற்குலக சக்திகளுக்கு இது ஒரு கேந்திரப்பிரச்சினை மட்டும்தான். ஆனால் இந்தியாவிற்கு கேந்திரப் பிரச்சினையுடன் தேசியப் பாதுகாப்பு பிரச்சினையும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக சீனாவை தூரவிலக்கி வைப்போம் என்றால் பெருந்தேசிய வாத எழுச்சி அதற்கு இடம்கொடுக்கவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே போல அவற்றிற்கு ஏற்பட்டது. மகிந்தரின் கட்டம், கட்டமான காய்நகர்த்தல்களுக்கு முன்னால் இந்தியா அமெரிக்க நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் முன்னேற முடியாமல் தடுமாறிச் சறுக்கின.

இந்தச் சறுக்கல்களுக்கு மத்தியில் தான் உள்;ராட்சிச் சபைத் தேர்தல் இடம் பெற்றது. இதனால் தான் அமெரிக்க-இந்திய-சீன சக்திகளுக்கு இத்தேர்தல் முக்கியமானதாக இருந்தது.

இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரல்கள் முழுமையாக சறுக்குமா? அல்லது சறுக்கல்களுக்கு மத்தியில் நின்று பிடிக்குமா? என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரலை முழுமையா சிதைத்து விட்டது. பெருந்தேசிய வாதத்திடம் இச்சக்திகள் மீண்டும் ஒரு தடவை தோற்றுப்போய்விட்டனர். இச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நிரந்தரமாக கிடப்பிற்கு போகப்போகின்றது.

இரண்டாவது இலங்கை மட்டத்தில் இத்தேர்தல் முக்கியமாக இருந்தது. அதாவது மைத்திரி-ரணில் அரசாங்கம் நிலைத்திருக்குமா? வீட்டிற்குச் செல்லுமா? என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தன. இது விடயத்தில் மகிந்தர் கட்டம் கட்டமாக முன்னேறி இருந்தார்.பெருந்தேசியவாத தளத்தை தன்னோடு மட்டும் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டார். ஆட்சி மாற்றத்தின் ஆரம்பத்தில் அவர் சற்று நிலை குலைந்த போதும் பின்னர் நிதானமாக முன்னேறினார். தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்குச் சென்றார். ஏற்கனவே இடம்பெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் அவர் பெற்ற உச்ச வெற்றி அவரை மேல் நிலையில் வைத்திருந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக வரப்போவதில்லை என்பது ரணில்-மைத்திரி கூட்டுக்கு முன் கூட்டியே தெரிந்தது. உள்;ராட்சி சபைத்தேர்தலை நீண்ட காலமாக பிற்போட்டமைக்கு இந்தத்தோல்விப்பயம் தான் காரணம். தற்போது தேர்தல் முடிவுகள் மகிந்தரை எவரும் தொட்டுவிட முடியாத உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது. இதன் விளைவு தேசிய அரசாங்கம் முடிவு நிலைக்குச் சென்றுள்ளது.

இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரல்கள் காற்றில் பறக்கத்தொடங்கியுள்ளன. எதிர்க்ட்சித் தலைவர் பதவி பறிபடப்போகிறது. இவ்வளவு தூரம் உயர்நிலையில் இருந்தாலும் மகிந்தர் ஆட்சி அமைப்பதற்கு அவசரப்படவில்லை. தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியினைப் பெறுவதிலேயே அக்கறையாக இருக்கின்றார். தேசிய அரசாங்கத்தை சிதைப்பதுதான் அவரது முதலாம் கட்ட இலக்கு. அந்த இலக்கில் அவர் வெற்றி பெற்று விட்டார். இரண்டாம் கட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, மைத்திரியை முழுமையாக தனிமைப்படுத்துவது, மைத்திரி தானாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமைப்பதவியிலிருந்து விலகக்கூடும் அல்லது மகிந்தர் அணியுடன் சேரக்கூடும்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை தனித்து அரசாங்கத்தை அமைக்குமாறு மைத்திரி கேட்டிருக்கின்றார் ரணிலும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம். கூட்டமைப்பு வெளியில் நின்று ஆதரவினை கொடுக்கும் முடிவினை எடுத்துள்ளது. இணக்க அரசியல்; என்ற பொறிக்குள் இருந்து கூட்டமைப்பு இப்போது விடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை.

மூன்றாவது தமிழர் தாயக அரசியல். இத்தேர்தல் தாயக அரசியலில் சில அதிர்வுகளை உருவாக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் தலைகீழாகப் புரட்டிப்போடும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டமைப்பின் வாக்கு வங்கி வெகுவாகச் சரிந்துள்ளது. ஒரு சில உள்ளூராட்சி சபைகளைத்தவிர ஏனையவற்றில் அதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. இரண்டாவது நிலையிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் அல்லது மூன்றாவது நிலையிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேரவேண்டிய நிலை. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேர்வது அதன் எதிர்காலத்தை முழுமையாக இல்லாமல் செய்யும். எனவே கூட்டமைப்பக்குள்ள ஒரே ஒரு தெரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டுச் சேர்வது தான். கூட்டமைப்புச் சார் சக்திகள் எப்படியாவது கூட்டுச் சேரவேண்டும் என்பதற்காக கந்தர்மடம் மணல்தரை ஒழுங்கையிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் தவம் கிடக்கின்றனர். எப்போதும் வெறிச்சோடியிருக்கும் மணல்தரை ஒழுங்கை கூட்டமைப்பு சார் சக்திகளின் வாகனங்களினால் நிரம்பிக் கிடக்கின்றது.

கூட்டமைப்புடன் முன்னணி இணைவதற்கு கொள்கை, நிறுவனத்தடைகள் பல இருக்கின்றன. நேற்று வரை தமிழ்த்தேசிய அரசியலை கீழிறக்கிக் கொண்டிருந்த கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தனது கொள்கை உறுதியினை பலவீனப்படுத்த முன்னணி ஒருபோதும் விரும்பப் போவதில்லை.

முன்னணியைப் பொறுத்த வரை தற்போது ஏறுமுகம் கூட்டணி சேர்வதற்கான அவசியமும் அதற்கில்லை. கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கே முயற்சிக்கும். அது தனது நிலைப்பாட்டை உறுதியாகவே வெளிப்படுத்தியிருக்கிறது.

கூட்டமைப்பக்குள்ள பிரதான பயம் உள்ளூராட்சி சபை நிர்வாகத்தை சீராக நடாத்துவதல்ல. மாறாக எதிர்வரும் தேரதல்களில் முன்னணித் தன்னை முழுமையாக துடைத்தழித்து விடும் என்பதே! கூட்டமைப்பிற்கு எதிர்காலத்தில் ஏறுமுகத்திற்கான சாத்தியக் கூறுகள் மிகக்குறைவு. இறங்கு முகத்திற்கான வாய்ப்புக்களே அதிகம். இதுவரை கால கூட்டமைப்பின் வலிமை என்பது அரசியல் தீர்வும், ஐக்கியக் கோசமும் தான். மகிந்தவின் எழுச்சி அரசியல் தீர்வினை கிடப்பில் போட்டு விட்டது. தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தினால் ஐக்கியக் கோசம் சந்தி சிரிக்கக்கூடிய வகையில் சிதறுண்டு விட்டது. விக்கினேஸ்வரனை ஒதுக்கியமை, எதுவுமே இல்லாத இடைக்கால அறிக்கையை சந்தைக்குக் கொண்டு வந்தமை, ஊடகங்களுடனான சுமந்திரனின் மோதல், அதிரடிப்படையின் உடல் தடவுதல், அருந்தவபாலன் விவகாரம் என பல காரணங்களும் இணைந்து கூட்டமைப்பை மேலெழாதவாறு கீழிறக்கிவிட்டுள்ளது.

தமிழ் மக்களிலுள்ள முன்னேறிய பிரிவினர் மத்தியில் முன்னணி ஆழமாக வேரூன்றிவிட்டது. இனி வேரூன்றுதல் பயம் அதற்கில்லை. தண்ணீர் ஊற்றி வளர்ப்பது மட்டும்தான். தொடர்ச்சியான நீர் ஊற்றலும் பசளையிடலும் இல்லாவிட்டால் பயிர் கருகிவிடும். இதனால் பேரவைக்கான பணிகள் நிறையவே காத்திருக்கின்றன. தற்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் வேர் அதிகம் ஊன்றியிருக்கின்றது. வன்னியில் குறைவு. கிழக்கில் மிகக்குறைவு. வன்னி, கிழக்கு எல்லாம் வேர்படர வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அடி நிலை மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய அரசியல் பலவீன நிலையில் உள்ளது. சமூகமாற்றப்பண்புகளின் உள்ளடக்கம் தமிழ் தேசியத்தில் குறைவாக இருப்பதே இதற்கான காரணம். சமூக மாற்றத்தை உள்ளடக்காத தமிழ் தேசியம் முழு நிறைவான தேசியமாக இருக்கப் போவதில்லை.

முன்னணியின் வெற்றிக்கு பிரதான காரணம் கஜேந்திர குமாரின் மலைக்கவைக்கும் உறுதிப்பாடுதான். கொள்கையை நிலை நிறுத்துவதற்காக எத்தனை தடவை தோற்பதற்கும் அவர் தயாராக இருந்தார். தனக்கான காலம் வரும் வரை பொறுமையாக இருந்தார். என்றோ ஒரு நாள் மக்கள் உண்மையை உணர்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தார். மக்கள் அவரது நம்பிக்கையைப் பொய்க்க விடவில்லை. 2009 ஆயுதப் போர் மௌனிக்கப் பட்டதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று ஒவ்வொரு நிகழ்வையும், அதன் ஆபத்துக்களையும் பொறுப்போடு விளக்கினார்.<br />
அவருடைய ஒரு கருத்துக்கூட பொய்யாகிவிடவில்லை.

இப்பத்தியாளர் வழமையாக கூறுகின்ற விடயம் ஒன்று தான் “தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சிகளல்ல மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக் கூடிய ஒரு தேசிய இயக்கமே”

இன்று எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. முன்னணி அவ் இலக்கினை நோக்கி முன்னேறுமா?

Leave a comment