பாராளுமன்றத் தேர்தலை கோருவது தவறு- ஜே.வி.பி.

302 0

ஒரு தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்ததன் பின்னர், அதேபோன்ற இன்னுமொரு தேர்தலில் தான் அந்த மக்கள் ஆணையை மாற்ற முடியும் எனவும் ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் அந்த ஆணையை மாற்றுமாறு கோருவது தவறானது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து பாராளுமன்றத்தைக் கலைக்க தீர்மானிக்குமாயின் பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களாக இருப்பதற்கு கால எல்லையொன்று எதற்காகவுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரையில் குறித்த உறுப்பினர் பதவியில் அங்கத்துவம் வகிக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்கள் நோக்கம் தவறி செயற்படுகின்றார்கள் எனின், இன்னுமொரு பாராளுமன்றத் தேர்தலிலேயே சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மக்களினால் தீர்மானிக்கப்படுவார்கள்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஒரு நோக்கம் உள்ளது.குறித்த நோக்கத்தின் பேரிலேயே மக்கள் வாக்குகளை வழங்குகின்றனர். ஜனாதிபதித் தேர்தலுக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் வேறு நோக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கோருவதாயின் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று எதற்கு? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a comment