அமெரிக்காவிலுள்ள மில்லேனியம் ஷெல்லேன்ஜ் கோபரேஷன் என்றழைக்கப்படும் MCC நிறுவனத்திடமிருந்து, இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களிலான நிதி உதவி கிடைக்கப்பெறவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் போக்குவரத்துத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி முகாமைத்துவப் பணிகளுக்காகவே, மேற்படி நிதியுதவி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடுகளின் தகுதி நிலைகள் குறித்து ஆராயப்பட்டே, மேற்படி நிறுவனத்தால் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2004ஆம் ஆண்டுத் தேர்வின் போது, இலங்கை முதலிடத்தைப் பெற்றிருந்த போதிலும், அப்போது நாடு எதிர்கொண்டிருந்த யுத்த நிலைமை காரணமாக, உதவி கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கான நிதியுதவியை வழங்க, மேற்படி MCC நிறுவனம் தீர்மானித்துள்ளதென. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. அந்த வகையில், நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான வேலைத்திட்டம் முதற்கட்டமாகவும் வசதி குறைந்த பிரதேசங்களின் பிரதான வீதிகளை புதுப்பிக்கும் வேலைத்திட்டம், இரண்டாம் கட்டமாகவும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

