சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதில் தவறு இல்லை – காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி

5229 0

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பது தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் விழாவில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வீர்களா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் உருவ படம் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. மனதார வரவேற்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது தவறில்லை. எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவருக்கு மணிமண்டபம் கட்டுவதும் தவறில்லை.

இன்றைய கால கட்டத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் அரசியலில் நீடிப்பது கடினமான காரியமாகும். இதில் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல.

ஒரு பெண் என்ற முறையில் அவர் கடினமான அரசியல் பாதையை கடந்து வந்தவர். பல்வேறு இன்னல்கள் வழக்குகள் இடையூறுகள் அவருக்கு வந்த போதிலும் அதை எதிர்கொண்டு அரசியலில் நீடித்தார். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் தலைவர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக என்னை கவர்ந்து இழுத்த தலைவராக ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். வீரமிக்க பெண்மணியாக பார்க்கிறேன்.

எம்.எல்.ஏ.வாக எதிர்க்கட்சி தலைவராக முதல்- அமைச்சராக இருந்தவர் அவருக்கு மரியாதை கொடுப்பது தவறில்லை.

மற்ற கட்சிகள் அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறலாம். ஆனால் கீழ் கோர்ட்டில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வுக்கு தன்னை ஆட்படுத்தி கொள்ள அவர் உயிருடன் இல்லை. மரணம் மூலம் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சசிகலா மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது போல் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பார். அந்த வாய்ப்பு இப்போது அவருக்கு இல்லை.

ஜெயலலிதாவை எதிர்க்கட்சினர் ஊழல்வாதி என்கிறார்கள். ஏதோ துரதிஷ்டம் அவர் ஊழலில் சிக்கிக் கொண்டார். அதை தவிர்த்து அவரது திட்டங்களை பார்த்தால் பல வி‌ஷயங்களில் அவரை பாராட்டலாம். அவரது திட்டங்களில் முக்கியமாக தொட்டில் குழந்தைகள் திட்டம், தமிழ்நாட்டில்தான் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. மற்ற மாநிலங்கள் அவரது திட்டங்களை பின்பற்றி செயல்படுத்துகிறார்கள். ஏழைகளுக்காக திறக்கப்பட்ட அம்மா உணவகம், என பல திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

எனவே ஜெயலலிதா மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவர் ஒரு பெண் என்ற முறையில் துணிச்சலுக்கு உதாரணமாக திகழ்ந்தவர். அவரது படத்திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை,. அழைப்பிதழ் வந்தால் பங்கேற்பதில் தவறில்லை.

நான் கட்சி விசயமாக தற்போது பெங்களூர் வந்துள்ளேன். திடீரென சட்டசபையை கூட்டி இருப்பதால் அதில் பங்கேற்க முடியுமா? என்று தெரியவில்லை. சென்னையில் இருந்தால் கண்டிப்பாக சட்டசபைக்கு சென்று வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment