பல்லாவரம் – திருமுல்லைவாயலில் பூனைகறி பிரியாணி விற்பனை

7267 0

சென்னையில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி பல கடைகளில் கிடைக்கிறது. ஆனால் பிளாட்பார கடைகளில் பூனைகறி பிரியாணி விற்கப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ராயப்பேட்டை, அயனாவரம், பெசன்ட்நகர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை போன்ற பல பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் அடிக்கடி திருட்டு போனது.

இதுகுறித்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. பூனைகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தாலும் காணாமல் போன பூனையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இதனால் பூனையை பறி கொடுத்த நபர்கள் கடந்த மாதம் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதனை சந்தித்து முறையிட்டனர்.

நரிக்குறவர்கள் சிலர் பூனையை பிடித்து செல்வதாகவும், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என்றும் கமி‌ஷனரிடம் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் ஜமீன் பல்லாவரம், திருமுல்லைவாயல், ஆவடி, பூம்பொழில்நகர், கன்னிகாபுரம், அம்பத்தூர் எஸ்டேட், செங்குன்றம் பகுதிகளில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நரிக்குறவர்கள் பூனை திருடுவதை ஒப்புக் கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் பல வருடங்களாக பூனைகளை பிடிப்பதாகவும், திருடிய பூனைகளை பிளாட்பார பிரியாணி கடைகளில் 50 ரூபாய்க்கு விற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் திருமுல்லைவாயலில் உள்ள நரிக்குறவர்களிடம் சோதனையிட்டதில் அங்குள்ளவர்கள் பையில் 12 பூனைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதவிர 3 பூனைகள் இறந்த நிலையில் கிடந்தது. அதையும் கைப்பற்றினர்.

பிளாட்பார கடைகளில் பூனைகளை கறிக்காகவும், பிரியாணிக்காகவும் வாங்குவதால் ஆங்காங்கே பூனைகளை திருடி விற்றதாக தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

சென்னையில் ‘காக்கா’ பிரியாணி கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகர் விவேக் காக்கா பிரியாணி சாப்பிட்ட பிறகு ‘காகா’ என கத்துவார். இப்போது அந்த பட்டியலில் பூனைகறி பிரியாணியும் வந்து விட்டது.

Leave a comment