அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் !

352 0

தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர்.

அப்போட்டியில் இலங்கை சம்மாந்துறையைச் சேர்ந்த இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டார்.

97 நாடுகளை சேர்ந்த 1800 விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். இப்போட்டியில் 4 மலேசிய தமிழர்களுடன் சேர்த்து 1 ஈழத் தமிழனாக போட்டி இட்டு வெற்றி அடைந்து உள்ளார்.

இவ் விருது ‘கணித உதவியாளன்’ எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புக்கே வழங்கப்பட்டது.

தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை சம்மாந்துறை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு 31 தேசிய விருதுகளையும் 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் எமது ‘அன்பே சிவம்’ அறப்பணி அமைப்பின் தொண்டரும் ஆவார். இவன் தமிழ் ஈழத்தில் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி.

இதன்போது கருத்து தெரிவித்த வினோஜ்குமார்,

“எனது இரண்டு கண்களான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கும், சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மேலும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் எங்கள் அறப்பணி அன்பே சிவத்திற்கும், மற்றும் இன மத பேதமின்றி நாடு கடந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள்.

என்னுடைய கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரை தரம் என்பதற்கு அல்ல. உங்கள் அனைவரது ஆசிர்வாதம் மற்றும் ஊக்கப்படுத்தலே மிக முக்கியமாக இருந்தது.

எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ஒருசில நல்லவர்களிள் நட்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவ் விருது கிடைத்தது.

புதியவற்றினை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது. எனவே எமது நாட்டில் என்னை விட பல திறமை வாய்ந்த எத்தனையோ பல கண்டுபிடிப்பாளர்கள் இருக்கின்றார்கள்.

இன மத பேதமின்றி அனைவரும் திறமைக்கு மதிப்பு வழங்கினால் மாத்திரமே எமது நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய சமாதானமும் அபிவிருத்தியும் அடையும்.

இதனை அரசியலினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினாலோ ஏற்படுத்த முடியாது.” என்றார்.

Leave a comment