மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப்: மாலத்தீவு விவகாரம் குறித்து ஆலோசனை

209 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மாலத்தீவு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதிபர் அப்துல்லா யாமீன் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.  முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

இது ஒருபுறமிருக்க அரசுக்கு எதிரான போராட்டங்களை ராணுவம் ஒடுக்கி வருகிறது. மாலத்தீவில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது, மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து  இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். மேலும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இருவரும் தொடர்ந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என இருவரும் உறுதி அளித்துள்ளனர்.

வடகொரியா அரசு அணு ஆயுதங்களை அழிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். இத்தகவலை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a comment