வவுனியாவில் வர்த்தகரை ஏமாற்றிய காப்புறுதி நிறுவன முகவர் !!!

229 0

வவுனியாவில் புடவைக்கடை வர்த்தகர் ஒருவரை ஆயட்காப்புறுதி பெற்றுத் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு முகவர் ஒருவர் மோசடி செய்துவிட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் பிரபல்யமான புடவைக்கடை உரிமையாளரிடம் சென்ற பிரபல்யமான காப்புறுதி நிறுவனத்தின் முகவர் ஒருவர் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு ஆயட் காப்புறுதி பெற்றுத் தருவதாகவும்; ஒரு தொகை வைப்பிலிட்டால் பல அனுகூலங்களுடன் பில்லியன் கணக்கில் பணம் பெற முடியும் என்று கூறி மூளைச்சலவை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த வர்த்தகரும் மனைவியின் பெயரில் ஆறு இலட்சம் ரூபாவிற்கு நிரந்தர வைப்பு காப்புறுதி ஒன்றினை பெற்றுக் கொண்டதுடன் இரண்டு இலட்சம் ரூபாவாக காப்புறுதி பணத்தை மூன்று தவணைகளில் செலுத்தியுள்ளார்.

பணத்தை செலுத்தி முடித்த பின்னர் சில தினங்களில் வர்த்தகருக்கு ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட காப்புறுதி உடன்படிக்கை புத்தகத்தை முகவர் வழங்கியுள்ளார்.

காப்புறுதி நிறுவனத்தின் பேரில் உள்ள நம்பிக்கையிலும் குறித்த முகவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பதாலும் காப்புறுதி உடன்படிக்கை புத்தகத்தை வாசித்து கூட பார்க்காது வைத்துள்ளார்.

காப்புறுதி எடுத்துக் கொண்டு சிறிது காலத்தின் பின்னர் தேவையின் நிமித்தம் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

காப்புறுதி நிறுவனத்திற்கு சென்ற பின்னரே வர்த்தகருக்கு தன்னால் வழங்கப்பட்டுள்ள ஆறு இலட்சம் ரூபா காப்புறுதி நிறுவனத்தில் வைப்பிலிடப்படவில்லை என்றும் தனக்கு வழங்கப்பட்ட காப்புறுதி உடன்படிக்கை புத்தகத்தில் வர்த்தகர் காப்புறுதி பெற்றுக்கொண்டதாகவோ பணம் செலுத்தியதாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஏமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த முகவர் காப்புறுதி நிறுவனத்திலிருந்து விலகிச் சென்றவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வர்த்தகர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a comment