மீட்பு பணியின்போது மீண்டும் நில அதிர்வு: தைவான் நிலநடுக்கத்தில் பலி 9 ஆக உயர்வு

253 0

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்றபோது மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் அச்சம் ஏற்பட்டது.

தைவான் நாட்டின் துறைமுக நகரமான ஹுவாலியனில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்  6.4 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக ஓட்டல், கடைகள், விடுதி மற்றும் வீடுகளைக் கொண்ட பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்தது. அதன் தரைத்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதற்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.

இதுதவிர பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளும் இடிந்துள்ளன. பாலங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு வரை 7 பேர் உயிரிழந்த நிலையில், அதன்பின்னர் இன்று அதிகாலை நடந்த மீட்பு பணியின்போது மேலும் ஓட்டலில் இருந்த சீனப் பெண், ஓட்டல் ஊழியர் என 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.

மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹுவாலியனில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியிருந்தது. ஏற்கனவே தரைத்தளம் சேதமடைந்து, ஒருபக்கம் சாய்ந்த நிலையில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழும் என அனைவரும் அஞ்சினர். எனினும், மீட்புக் குழுவினர் தைரியமாக உள்ளே சென்று மீட்பு பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment