மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிடுமா?

249 0

மாலத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கவனித்து வரும் இந்தியா தேவைப்படும் பட்சத்தில் மாலத்தீவுக்கு செல்லும் வகையில் தனது கடற்படையையும், விமானப்படையையும் தயார் நிலையில் வைத்துள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திடீரென அந்த நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்தார். 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் அதிபர் யாமீன் அப்துல் கயூம், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஆனால் அவரது ஆசைக்கு தடைபோடும் வகையில் மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகளை வெளியிட்டனர்.

குறிப்பாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத்தை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஆளும் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த 12 எம்.பி.க்களுக்கு மீண்டும் பதவி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது அதிபர் யாசின் அப்துல்கயூமுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் நினைத்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்து விட முடியும். அத்தகைய நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தை முடக்கி அதிபர் யாமின் உத்தரவிட்டார்.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாலத்தீவு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீது அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் 2 நீதிபதிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கூறி இந்த நடவடிக்கைகளை அதிபர் மேற்கொண்டார்.

நீதிபதிகள் கைது செய்யப்பட்டதற்கு மாலத்தீவு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. தலைநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை அதிபர் யாமீன் அப்துல் கயூம் மாலத் தீவு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கோர்ட்டுகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கயூம் நேற்று புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார். தனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட உத்தரவுகளை அவர் திரும்பப் பெறச் செய்தார்.

அதன்படி முன்னாள் அதிபர் முகம்மது நசீத் உள்பட 9 தலைவர்களை விடுதலை செய்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் 12 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற உத்தரவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டத்தையும் தனது காலடிக்குள் அதிபர் யாமீன் அப்துல் கயூம் கொண்டு வந்துள்ளார்.

மாலத்தீவில் அதிபர் யாமீனின் செயல்பாடுகள் அத்துமீறி செல்வதால், உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நாட்டு மக்களில் சுமார் 40 சதவீதம் பேர், இந்தியா உடனே ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நசீத்தும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் விடுவிக்க இந்தியா, தனது ராணுவத்தை அனுப்ப வேண்டும். அதோடு தூதர்களையும் அனுப்பி யாமீனுடன் பேச்சு நடத்தி அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மாலத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து மாலத்தீவு சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் சுமார் 1 மணி நேரத்துக்குள் மாலத்தீவுக்கு செல்லும் வகையில் இந்தியா தனது கடற்படையையும், விமானப்படையையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. மேற்கு பிராந்திய கடல் பகுதியில் எப்போதும் இந்திய கடற்படையின் 2 கப்பல் பிரிவு போர் கப்பல்கள் ரோந்துப் பணியில் இருக்கும்.

தேவைக்கு ஏற்ப அந்த போர் கப்பல்களை மாலத்தீவுக்கு 1 மணி நேரத்துக்குள் திருப்பி விட முடியும். அதற்கு ஏற்ப தயாராக இருக்கும்படி அந்த போர் கப்பல் பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-30 ஜெ “சூப்பர் ஹெர்குலஸ்”, சி-17 குளோப் மாஸ்டர் ரக விமானங்களும் மாலத்தீவுக்கு பாய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் மூலம் ஒரே நேரத்தில் அதிக எடை யுள்ள போர் ஆயுத தளவாடங்களையும் அதிக வீரர்களையும் கொண்டு செல்ல முடியும்.

இதில் சி.17 ரக போர் விமானம் 70 டன் எடையுள்ள போர் கருவிகளை ஒரே மூச்சில் 4200 கி.மீ. தூரத்துக்கு கூட எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த ரக விமானங்களில் ஆயுதங்கள் ஏற்றபட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவ தளபதியிடம் இருந்து உத்தரவு வந்த அடுத்த 2-வது நிமிடம் மாலத்தீவுக்கு புறப்படும் வகையில் இந்த ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் மாலத்தீவுக்கு செல்ல தயார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று ராணுவ கமாண்டோ படை பிரிவு ஒன்று டெல்லியில் இருந்து தென்னிந்திய பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த கமாண்டோ படை வீரர்களும் களத்தில் குதிப்பார்கள்.

கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை பிரிவுகள் முழு அளவில் உஷாராக வைக்கப்பட்டுள்ளன. ராடார் கருவிகள் கொண்ட விமானப் படையும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் போர் கப்பல்களும், விமானப்படைகளும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளதால் மாலத்தீவு பிரச்சினையில் இந்தியா உடனே அதிரடியாக தலையிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு உயர் அதிகாரிகள் யாரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

மாலத்தீவு விவகாரத்தில் மற்ற எந்த நாடுகளும் தலையிட கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது. அதாவது தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமுக்கு ஆதரவாக சீனா செயல்பட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவு குழப்பம் அடையும் பட்சத்தில் இந்தியா தலையிடுமா அல்லது மவுனமாக இருந்து விடுமா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி உள்ளன. மாலத்தீவில் உச்சக் கட்ட குழப்பம் வரும் நிலையில்தான் இந்தியா தனது அதிரடியை காட்டும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா லுதுபி என்பவர் ஈரோஸ் அமைப்பினர் உதவியுடன் அதிபர் மாமுன் கயூமின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார். சுமார் 60 ஈரோஸ் அமைப்பினர் ஆயுதம் ஏந்தி அந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். உடனே இந்தியாவிடம் அதிபர் மாமூன் கயூம் உதவி கோரினார்.

அடுத்த ஒருமணி நேரத்துக்குள் இந்திய ராணுவம் மாலத்தீவில் ஊடுருவியது. ஆட்சியை கவிழ்க்க முயன்ற இலங்கை தமிழ் போராளிகளை அடித்து விரட்டியது.

ஆனால் தற்போது அத்தகைய சூழ்நிலை எதுவும் மாலத்தீவில் இல்லை. அது மட்டுமின்றி தற்போதைய மாலத்தீவு அதிபர் யாமீன், சீனாவின் ஆதரவாளாக உள்ளார். சீன போர் கப்பல்கள் மாலத்தீவில் நிற்க கடந்த ஆண்டு அவர் அனுமதி வழங்கினார்.

இதனால் தற்போதைய மாலத்தீவு பிரச்சினையில் இந்தியா சற்று பொறுமையை கையாள்கிறது. தற்போதைக்கு இந்தியா தனது ராணுவத்தை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டு மாலத்தீவு விவகாரங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

Leave a comment