எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், மதுரை மண்டல பொறுப்பாளருமான தங்கதமிழ்ச் செல்வன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலை சின்னம் நம்மிடம் இல்லை என்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி காணப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நமக்கு தனிக்கட்சியும், சின்னமும் தேவை என்பதை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. நம்மிடம்தான் அ.தி.மு.க. கட்சியும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். அதற்காக புதிய கட்சி அறிவிப்பை கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்ய மாட்டோம். இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

