கறை படிந்த கைகளுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா தூய கரங்களுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா? – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

21810 0

மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா ?

அல்லது இந்த இனத்தின் விடுதலைக்காக விலைகொடுத்ததவர்களின் வழியிலே சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகனான கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையை ஏற்று தூய கரங்களோடு உங்கள் முன் வந்துநிற்கின்ற எங்களுக்கு வாக்களிக்கப்போகின்றீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்கவேண்டும் என யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை வேட்பாளர்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் இன்று (05.02.2018) திங்கட்கிழமை தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“உங்கள் முன் வந்து வாக்குக் கேட்டு நிற்கின்ற எல்லோருடைய கரங்களிலும் இரத்தம் படிந்திருக்கிறது. எங்களின் கைகளில் கூட இரத்தம் படிந்திருக்கின்றது. ஆனால் அவர்களுடைய கைகளிலே படிந்த இரத்தம் எங்களைக் கொன்று குவித்த இரத்தம். மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த இரத்தம். ஆனால் எங்களுடை கைகளில் உள்ள இரத்தம் இவர்களால் கொல்லப்பட்டவர்களை தாங்கிப் பிடித்த இரத்தம். எங்கள் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை மாமனிதர் குமார் பொன்னம்பத்தை சுட்டுக்கொன்றபோது அவரை தங்கிப் பிடித்த இரத்தம்தான் எங்கள் கைகளில் உள்ளது.

மாறி மாறி ஆட்சிசெய்துவருகின்ற கட்சிகளான யானைச் சின்னத்தில் வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளிலும்,  கை சின்னத்தில் வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கைகளிலும், மொட்டுச் சின்னத்தில் வந்த மகிந்த ராஜபக்சவின் கைகளிலும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுக்குத் துணைபோய்க்கொண்டிருக்கின்ற மணி சின்னத்தில் வரும் ஜேவிபியின் கைகளிலும் எங்களை இனப்படுகொலை செய்த இரத்தம் படிந்துள்ளது.

ஒட்டுக் குழுவாய் எங்களைக் காட்டிக் கொடுத்து கொன்றொழித்த வீணைச் சின்னத்தில் வரும் ஈபிடிபியின் கைகளிலும் அதே கறைபடிந்த இரத்தம் படிந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலும் கறைபடிந்த இரத்தம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருக்கின்ற புளொட் அமைப்பு ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் எவ்வாறு காட்டிக்கொடுப்புக்களையும் கொலைகளையும் செய்ய துணைபோனதோ அதையே வவுனியாவில் இருந்து இறுதி யுத்தம் வரை செய்யது. புளொட் அமைப்பு யுத்தம் முடிந்தபின்பும் அதைச் செய்துவந்தது.

இன்று அந்த வவுனியாமண்ணிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் நான்கு சிங்களவர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள். அங்கே சிங்களமாயமாக்கலும் பௌத்தமயமாக்கலும் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அங்கே எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்ட தமிழருடைய  இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டும் என்று நாங்கள் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நான்கு சிங்கள வேட்பாளர்களுக்கு இடமளித்ததன் ஊடாக இந்த மண்ணிலே அவர்களுக்கு சட்டரீதியான உரித்து இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுக்கொண்டு தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு அந்தஸ்து வழங்கி வரலாற்றுத் துரோகத்துக்குத் துணை போயிருக்கின்றது.

இவ்வாறான கூட்டமைப்பு சிங்களவர்கள் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து குடியேற்றங்களை நிகழ்த்துவதையும் விகாரைகளை அமைத்து பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதையும் எவ்வாறு தடுக்கும் என்பதை மக்களாகிய நீங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுடைய மண் பறிபோவதற்கு நீங்கள் தலைவர்கள் எனக்கூறி வாக்களித்தவர்களே இன்று காரணமாகிவிட்டார்கள். இந்த ஆபத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

Leave a comment