தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018

18534 0

தமிழீழ ஆன்மாவை  மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம்  சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட  வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு , சிறப்பாக அமைக்கப்பட்ட தூபிக்கும், வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 25 வது ஆண்டு நினைவேந்தலோடு கேணல் கிட்டு அவர்களின் திருவுருவப்படத்துக்கும் மலர் தூவி  சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது .மாவீரர்களின்  நினைவுரைகள்  பகிரப்பட்டு,  சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன்,  சிறுவர்களின் எழுச்சி நடனங்களும் அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன், கவிதை , நாடகம், இசை வணக்கம்  என  அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக  அரங்கேறியது.

நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான கருத்துக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் விஸ்வலிங்கம்  மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்களும் காணொளி ஊடாக நிகழ்த்தினார்கள்.

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலைநாட்டவும் ,தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும் தாயகத்திலும் புலத்திலும் இளையோர்களை ஒருங்கிணைத்து அரசியற்செயற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.  

தாயகத்தில் நிலவுகின்ற சமகால அரசியல் புறச்சூழல் தொடர்பாக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு சிறிரவீந்திரநாதன் அவர்கள் உரையாற்றியதோடு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் தேடுபவர்களை புறம்தள்ளி உண்மையான உறுதியான நேர்மையான இளையோர்களை தெரிவுசெய்வது இன்று எமக்கு முன்னிருக்கும் கடமை எனவும் எடுத்துரைத்தார். இறுதியாக  தாயக மக்களின் வாழ்வாதாரத்தை நாம் மேலும் கட்டி அமைக்க முன்வரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்து பிறந்தாலும், வளர்ந்தாலும் தமது வேர்களை தேடும் பயணத்தை இந் நிகழ்வில் அரங்கேறிய சிறார்களின் எழுச்சி ஆக்கங்களிலிருந்து காணக்கூடியதாக அமைந்தது. தாயக உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக , அவர்களின் இருப்புக்காக தொடர்ந்தும் ஓர்மத்துடன்  சற்றும் சளைக்காமல் குரல்கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொண்டு விடுதலை மாலை நிறைவுபெற்றது.

Leave a comment