தொண்டர்களை மதிக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

306 0

தொண்டர்களை மதித்து அரவணைத்து செல்ல வேண்டும் என்று குற்றச்சாட்டுக்கு ஆளான தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கோவை மாநகரம், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இன்று கோவை வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தினார். ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளை முதலில் சந்தித்தார். அதன் பிறகு அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் விவாதித்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினார்கள்.

பழி வாங்கும் போக்குடன் மாவட்டச் செயலாளர் நடந்து கொள்கிறார். பாராமுகமாக நடந்து கொள்கிறார். கட்சிக்கு எவ்வளவுதான் உழைத்தாலும் எங்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்று பலர் ஆதங்கப்பட்டு மாவட்டச் செயலாளர் மீது புகார் கூறினார்கள்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பிரச்சனைகள் பற்றியும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், உங்கள் குறைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் நோக்கம் எல்லாம் தி.மு.க.வின் வெற்றியை நோக்கியே அமைய வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதில் தி.மு.க. வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் நீங்கள் உழைக்க வேண்டும். அவரவர் உடல் நலத்தை பேணி பார்த்து கொள்ளுங்கள் என்றார்.

உங்கள் புகார்களுக்கு 20 நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

புகார் பெட்டியில் போடப்பட்ட கடிதங்களையும் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததில் மாவட்ட செயலாளர்கள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களையும் தீவிரமாக பரிசீலித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை அழைத்து கண்டித்தார். கட்சி உங்களுக்காக கிடையாது. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நீங்கள் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Leave a comment