புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் 5 பேர்

231 0

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் என்பவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்தவகையில், இதன் உறுப்பினர்களாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அனில் குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி அதாஉட ஆரச்சிகே காமினி ரோஹன் அமரசேகர, உயர் நீதுிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் மல்லவஆராச்சிகே தொன் அண்டனி ஹெரல்ஸ், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் வாரிய பணிப்பாளர் நாயகம் வசந்தா ஜயசீலி கபுகம ஆகியோர் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த ஆணைக்குழு கடந்த 2006 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரையில் மேற்படி நிறுவனங்கள் இரண்டிலும் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆணைக்குழுவுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(02) நள்ளிரவு வெளியிடப்படும் ஜனாதிபதி நேற்று பிற்பகல் பண்டுவஸ்நுவரவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக் காலங்களில் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கே ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தன.

இருப்பினும், மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழு என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் நம்பிக்கை ஊட்டும் செயற்பாடுகள், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மீதான எதிர்பார்ப்புக்களை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment