யானை, வெற்றிலை எல்லாம் அரசாங்கமென்றால் நாம் அங்கு புல்லாவெட்டுகிறோம்?

227 0

யானை, வெற்றிலை மட்டும்தான் அரசாங்கம் என்றால், நாம் என்ன அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் புல்லு வெட்டிக் கொண்டும், தேங்காய் துருவிக்கொண்டும் இருக்கிறோமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

கொட்டாஞ்சேனை கிழக்கு, புளுமென்டால் வேட்பாளர்கள் சிவா, பாலசுரேஷ், லுஷாந்தன் கார்த்திக் ஆகியோரை ஆதரித்து கொட்டாஞ்சேனை சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆட்சியை எந்த ஒரு கட்சியும் தனித்து உருவாக்கவில்லை.  இந்த ஆட்சியை மாற்ற நாம் அனைவரும் “அன்னப்பறவை” என்ற பொது சின்னத்தை முன்வைத்து கடுமையாக பாடுபட்டோம்.  அரசாங்கத்துக்கு வெளியே, ஆட்சி மாற்றத்துக்கு கூட்டமைப்பும் பாரிய பங்களிப்பை வழங்கியது.

எனவே ஆட்சி மாற்றத்தை யானையோ, வெற்றிலையோ மாத்திரம் உருவாக்கவில்லை. நாமும் சேர்ந்துதான் உருவாக்கியுள்ளோம். எனவே யானைக்கு போட்டால்தான் அது அரசாங்கத்துக்கு வழங்கப்படும் வாக்கு என்றும், வெற்றிலைக்கு போட்டால்தான் அது நல்லாட்சிக்கு வழங்கப்படும் வாக்கு என்றும் எவராவது பிரசாரம் செய்தால் அது மோசடி.

இவர்கள் மட்டும்தான் அரசாங்கம் என்றால், நாம் என்ன அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் புல்லு வெட்டிக் கொண்டும், தேங்காய் துருவிக்கொண்டும் இருக்கிறோமா?

ஏணி, யானை, வெற்றிலை எல்லாமே அரசாங்கம்தான். ஆனால், அரசாங்கத்துக்குள் எங்கள் பலத்தை உறுதிப்படுத்துவது ஏணி மட்டும்தான்.

இன்றைய உள்ளூராட்சி தேர்தல் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. மாறாக நமது அரசாங்கத்துக்கு உள்ளே நமது பலத்தை உறுதிப்படுத்தும் தேர்தல். ஏணி சின்னத்துக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அரசாங்கத்துக்கு உள்ளே எனது கரங்களை பலப்படுத்தும் வாக்குகளாகவும் அமைகின்றன. இதை கொழும்பு மாநகரத்தில் வாழும் நமது மக்கள் இன்று மிகத்தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள்.

மைத்திரிபால சிறிசேன நாம் உருவாக்கிய ஜனாதிபதி. ரணில் விக்கிரமசிங்க நாம் உருவாக்கிய பிரதமர். இது  நாம் உருவாக்கிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தில்தான் நான் பலமான அமைச்சராகவும், கட்சித்தலைவராகவும் இருக்கின்றேன்.

அதற்காக நமது ஜனாதிபதி,  நமது பிரதமர், எமது அரசாங்கம் என புகழ் பாடிக்கொண்டு நாம் இருக்க முடியாது. இவர்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக தேசிய அரசாங்கம் என்று தேசிய நோக்கில் செயற்படுகிறோம். அதில் மாற்றமில்லை. ஆனால், நமக்கு என்று பிரச்சினைகள் வரும்போது, இவர்கள் எவரும் எமக்கு துணை வர மாட்டார்கள். அவற்றை நாம்தான் சந்திக்க வேண்டும். அவற்றை நாம்தான் தேசிய அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எனவே நமது அரசாங்கம் என்றாலும் இந்த அரசாங்கத்துக்குள் நாம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பலமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், இவர்களும் எம் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். எம்மை வெறும் வாக்கு வங்கிகளாக மாத்திரம் கணக்கிட்டு விடுவார்கள். இந்த உண்மைகளை வரலாறு எனக்கு கற்று கொடுத்துள்ளது.

ஆகவேதான் நான் முக்கியமான சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும்பான்மை கட்சி சதிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறேன். இப்படி நான் இருப்பதுதான் இவர்கள் எல்லோருக்கும் இன்று பிரச்சினை.

ஆகவேதான் பெரும்பான்மை கட்சி அரசியல்வாதிகள் சிலர் என்னை எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்து விட பார்க்கிறார்கள். அதேபோல் பெரும்பான்மை கட்சி அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து வயிற்றுப்பாட்டு அரசியல் வியாபாரம் செய்யும் ஒருசில தமிழர்களுக்கும், என்னை ஒழிப்பது தேவையாக இருக்கிறது. ஆனால், அரசியலில் இவர்கள் எல்லோரும் கில்லாடிகள் என்றால், நான் அதில் பலே கில்லாடியாக இருக்கிறேன்.  இதனால் என்னை ஒழிப்பது சுலபமல்ல.  இந்த அரசியல் உண்மைகள் பற்றிய உயர்ந்த புரிந்துணர்வு இன்று என்னை நம்பும் மக்களுக்கு இருக்கிறதாக நம்புகிறேனென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment