மாநில பாடத்திட்டத்தில் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன்

198 0

தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான கேள்விகளை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான கேள்விகளை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒரு மாபெரும் அரணாக நின்று மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஜெயலலிதா பாதுகாப்பு கொடுத்தார். ஆனால், இன்று ஏழை தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை ‘நீட்’ விழுங்கி கொண்டிருக்கிறது. இதை தடுக்க திறனற்றவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருப்பது வெட்கக்கேடானது.

‘நீட்’ தேர்வு முறைக்கு தமிழகம் இன்னும் ஆயத்தமாகாத நிலையில், 2018-2019-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. மாணவர்களை தயார்படுத்துவதாக பயிற்சி வகுப்புகளை வெறும் விளம்பரத்துக்காக தொடங்கிவிட்டு, அதை தீவிரப்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டதன் மூலம் இந்த அரசு மாணவர்களின் நலனில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது.

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயில ‘நீட்’ தேர்வு தடையாக இருப்பதால், இத்தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது ‘நீட்’ கேள்விகள் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும்.

இதை மீறி தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை மத்திய அரசு நடத்தினால் அது தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் மனநிலையைத்தான் காட்டுவது உறுதியாகி விடும். மாநில அரசு கடந்த ஆண்டை போல் போலி வாக்குறுதிகளையோ, முயற்சி எடுப்பதுபோல போலி நடிப்பையோ மேற்கொள்ளாமல் உரிய கவனத்தோடு செயல்பட வேண்டும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment