மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி: மு.க.ஸ்டாலின்

206 0

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். அப்போது வழியில் அவர் கடலூர் முதுநகரில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான 5 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வந்தார்.

அங்கு அவரிடம் மீனவர்கள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். அந்த கிராமத்தில் புயலில் சிக்கி மாயமான 5 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

அப்போது அவரிடம், எங்கள் கிராமத்தில் ஒக்கி புயலில் சிக்கி இறந்த குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கி, தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதே உண்மை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் எத்தனை மீனவர்கள் காணாமல்போனார்கள் என்ற புள்ளிவிவரத்தை கூட இதுவரை அரசு வெளிப்படையாக தெரிவிக்கமுடியாத நிலையில் இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒக்கி புயலால் மாயமான மீனவர்களில் 19 பேர் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ யாரும் வந்து சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை.

காணாமல்போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

மீனவர்களை கடைசி நிமிடம் வரைக்கும் தேடுவோம் என்று கவர்னர் உரையிலேயே குறிப்பிட்ட நிலையில், தற்போது கடைசி வரைக்கும் தேடுவோம் என்ற தவறான தகவலை தான் சொல்கிறார்கள்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக சிதம்பரத்தில் நேற்று காலை தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை நடத்திவைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மத்தியில் உள்ள மோடி அரசு பண மதிப்பு நீக்க அறிவிப்பை இரவோடு இரவாக வெளியிட்டதுபோல, தமிழகத்தில் மோடியின் அடிமையாக இருக்கக்கூடிய ஆட்சியும் போக்குவரத்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஏன் பயப்படுகிறீர்கள்? என்று இந்த அரசை பார்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளே கேள்வி கேட்டிருக்கிறார்கள். குட்கா விற்பனையை தடுக்கும் இடத்தில் இருக்கிற டி.ஜி.பி. ராஜேந்திரன் மாமூல் வாங்கி இருக்கிறார் என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. ஒரு அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று ஆதாரங்களோடு செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆகவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று திமு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. விசாரிக்கப்போகிறது என்ற தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. அப்போது குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a comment