முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு காணி வழங்க மறுத்த வடக்கு முதலமைச்சர்

208 0

வடக்கிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை பெற்றுத் தருமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். 

யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டதாக அமைச்சர ரிஷாத், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

தற்போது அந்தக் குடும்பளுக்காகவும், அந்தக் குடும்பங்களின் வாரிசுகளுக்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி தேவை என்றும் அவ்வாறு இனங்காணப்பட்டுள்ள சுமார் 780 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக சுமார் 1000 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தேவைப்படுவதாகவும அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னர் வசித்து வந்த நிலையில் போர்க்காலத்தில் தமது இடங்களை இழந்த, மக்கள் தற்போது புத்தளம் மற்றும் வேறு பிரதேசங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருவதாக அமைச்சர் கூறியுள்ள போதிலும் எவ்வித காரணங்களையும் குறிப்பிடாமல் அமைச்சர் ரிஷாதின் வேண்டுகோளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

Leave a comment