வடக்கு – கிழக்குக்கு சிங்களவர்கள் தன்னிச்சையாக வரவில்லை

232 0

“சிங்கள மக்கள் தாங்களாகத் தன்னிச்சையாக வடக்கு, கிழக்குக்கு வரவில்லை. கல்வி தேடி வரவில்லை, தமக்கான காணி தேடிக்கூட வரவில்லை, சீதோஷணம் நாடி வரவில்லை. அரசியல்வாதிகளின் பலாத்காரத்தின் நிமித்தம் வந்தார்கள் அல்லது ஆசை காட்டியதால் வந்தார்கள்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

இவ்வார கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதாவது, தமிழ்க் கட்சிகள், ஏன் நீங்களும் கூட, வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடிகொள்ளப் பார்க்கின்றார்கள்; எமது பாரம்பரியம் அழியப் போகின்றது என்றெல்லாம் குரல் எழுப்புகின்றீர்கள். தமிழராகிய நாம் பெருவாரியாக கொழும்பில் குடியிருக்கின்றோமே அது சிங்களப் பாரம்பரியத்தை அழிப்பதாக அர்த்தம் கொள்ள முடியாதா? நீங்கள் உங்கள் கூக்குரல்களால் கொழும்பில் வசிக்கும் எம்மையெல்லாம் அவதிக்குள்ளாக்குகின்றீர்கள் என்பதை ஏன் புரிந்து கொள்ள மாட்டீர்கள்? இதற்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்ல; அது பல்லின, பல்சமய, பன்மொழி பேசும் மக்கள் வாழும் நகரம். நாட்டின் தலைநகரம். பாதுகாப்புக் கருதி முன்னரும், யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் கூட, வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் காணிகள் வாங்கி, வீடு கட்டி வந்திருப்பது தமது தேவைகளின் நிமித்தம்; பலவித சொந்தக் காரணங்களின் நிமித்தமே. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்கள் அப்படிப்பட்டதா?

“நான் தெரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், சிங்கள மக்கள் தாங்களாக, தன்னிச்சையாக வடக்கு, கிழக்குக்கு வரவில்லை. கல்வி தேடி வரவில்லை; தமக்கான காணி தேடிக்கூட வரவில்லை; சீதோஷணம் நாடி வரவில்லை. அரசியல்வாதிகளின் பலாத்காரத்தின் நிமித்தம் வந்தார்கள் அல்லது ஆசை காட்டியதால் வந்தார்கள். அரசாங்க அனுசரணைகள் கிடைக்கும் என்ற ஆவலால் உந்தப்பட்டு வந்தார்கள்.

“தமிழர்கள் தெற்கில் வந்து வசிப்பதற்கும் சிங்களவர்கள் வடக்கில் வந்து வசிப்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை உங்களால் உணர முடிகின்றதா? சிங்களவர்கள் ஆசை காட்டியோ அல்லது பலவந்தத்தின் பேரிலோ அரசாங்கத்தால் அல்லது சிங்கள அரசியல்வாதிகளால் கொண்டுவரப்பட்டு, தமிழ் மக்கள் காலாதிகாலமாக வாழ்ந்த இடங்களில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு, அரச அனுசரணையுடன் படையினர் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஒன்று தனிப்பட்டவர் குடியிருப்பு; மற்றையது திட்டமிட்ட அரச குடியேற்றம். முன்னையோர் அரச அனுசரணை எதுவுமின்றி சொந்தப் பணத்தில் கொழும்பில் வாழ வந்தவர்கள். மற்றையோர் திட்டமிட்டு தமிழர் தாயகத்தைத் தம்வசமாக்க, பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள்.

“ஆகவே, பின்னையோரின் குடியேற்றம், எமது பாரம்பரியத்தை அழிக்கவென்று திட்டமிட்டு இயற்றப்படுகின்ற செயற்பாடு” எனத் தெரிவித்தார்.

 

Leave a comment