இலங்கையில் உள்ள தற்போதைய சட்ட முறைமை, மற்றும் நீதி முறைமையை மிகவும் திறமையானதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் வகையிலும் தீவிர மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒரு வழக்கை நிறைவு செய்ய அதிகபட்ச காலம் மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்
நேற்று (19) ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்ட மா அதிபருக்கு நேரடியாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்கு மூன்று நீதிபதிகள் மூலம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் 8 வருடங்கள் வரை தாமதமடைந்த வழக்குகளை புதிய சட்டத்தின் மூலம் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், ஒரு வழக்கை நிறைவு செய்ய அதிகபட்ச காலம் மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

