அம்பகமுவ எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

203 0

அம்பகமுவ பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட அடிப்படை உரிமைகள் மனு, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேஹ அலுவிஹார, கே.டி.சித்திரசிறி, நளின் பெரேரா ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன, மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே, மனு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எச்.டி.டி. நடராஜன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில், இந்நடவடிக்கையானது தனது அடிப்படை உரிமையினை மீறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த நவம்பர் 2ஆம் திகதியன்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறே கோரப்பட்டிருந்தது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ பிரதேசமானது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தின் போது, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது என்றும் இதனால் அப்பகுதி மக்களுக்கும், அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment