சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த டி.டி.வி.தினகரன்

199 0

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரசன் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று முதன்முதலாக பங்கேற்று எதிர்க்கட்சிகள் வரிசையில் தனியாக அமர்ந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ஏற்று கொண்டார். இன்று அவர் முதன் முதலாக சட்டசபை கூட்டத்துக்கு பங்கேற்க வந்தார். 9.50 மணிக்கு டி.டி.வி.தினகரன் சட்டசபை வளாகத்தில் வந்து காரில் இருந்து இறங்கினார். அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 பேரும் வரவேற்றனர்.

பிறகு தினகரன் சட்டசபைக்குள் சென்றார். அவரை அவரது ஆதரவாளர்களான விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி இருவரும் அழைத்து சென்றனர். அப்போது அவரை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, ரகுபதி, பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகன் ஆகிய 4 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனை பார்த்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதாரணி இருவரும் டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து கூறினார்கள். அதன்பிறகு டி.டி.வி.தினகரன் தனக்கு ஒதுக்கப்பட்ட 148-ம் எண் இருக்கைக்கு சென்றார். அந்த இருக்கையில் கடந்த கூட்டத் தொடர் வரை வெற்றிவேல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இருக்கையில் டி.டி.வி.தினகரனை எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி இருவரும் அமர வைத்தனர்.

கவர்னர் உரை தொடங்கியதும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. – காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேயஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர்க்கட்சி வரிசையில் டி.டி.வி.தினகரன் மட்டும் தனிமையில் அமர்ந்து இருந்தார். தொடர்ந்து அவர் கவர்னர் உரையை உன்னிப்பாக கவனித்தார்.

Leave a comment