“பிரச்சினைகளைத் தீர்ப்பதில், நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது. அரிசி, தேங்காய் மற்றும் உரம் ஆகியனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது. அதற்குச் சட்டமே தடையாக இருக்கிறது” என அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கேள்வி: யூரியா விலை அதிகரிப்பு மற்றும் உரப்பற்றாக்குறை காரணமாக, நாடுபூராகவும் விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், தேங்காய் மற்றும் அரசியின் விலைகளும் குறைக்கப்படவில்லை இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் விடுவது ஏன்?
பதில்: உரப் பிரச்சினைக்கு இன்று (நேற்று) இரவுடன் தீர்வு காணப்படும். பாகிஸ்தானில் இருந்து 40,000 மெற்றிக்தொன் உரம் வரவுள்ளது. அதிலொருதொகுதி, இன்றே (நேற்று) வந்துவிட்டது. இவை, 200 லொறிகள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகவே அனுப்ப வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உர ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பிரகாரமே, உரம் இறக்குமதி செய்யப்படுகின்றது.
அதேப்போல், வரட்சி காரணமாக தென்னமரங்கள் இறந்துள்ளன. குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 2 இலட்சம் தென்னங்கன்றுகள் இறந்துள்ளன. தென்னை முக்கோண வலயம் உள்ள பிரதேசத்தில் வசிப்பவன் என்ற ரீதியில் இதனைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நவம்பர், டிசெம்பர், ஜனவரி ஆகிய மாதங்களிலேயே, தேங்காயின் கேள்வி, இலங்கையில் அதிகரித்து இருக்கும். இந்நிலையில், தற்போதைய தேங்காயின் விலை அதிகரிப்பானது தற்காலிகமானதாகும்.
அத்துடன், அரிசிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, இறக்குமதிக்கான அனுமதி முற்றுமுழுதாக தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சரவையால் வழங்கப்பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை, சில வர்த்தகர்கள், இலங்கை உற்பத்தி எனப் பெயரிட்டு விற்கின்றனர். அவ்வாறே அரிசியின் விலையை அவர்களே நிர்ணயித்து விற்கின்றனர்.
கேள்வி: நத்தார் உற்சவ காலத்தில், தேங்காய் விலை குறையும், தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்த போதும், அது சாத்தியமாகவில்லை. இதற்கான வேலைத்திட்டம் என்ன?
பதில்: தேங்காயை இறக்குமதி செய்ய முடியாது. 1925ஆம் ஆண்டுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான், தேங்காய் இறக்குமதி தொடர்பில் அதிகாரிகள் கவனஞ்செலுத்துவர். எனவே, இதில் சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொண்டு, இதனைத் தீர்க்க முயற்சிக்கின்றோம்

