விக்னேஸ்வரனின் உருவப் பொம்மை எரிக்கப்படும்; எச்சரிக்கும் ஊழியர்கள்

14595 0

இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் 3 அம்ச கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினை நகர்த்தாவிடின், முதலமைச்சரின் உருவப் பொம்மையை எரிக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்று (01.01) முதல் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (02.01) கோண்டாவில் டிப்போவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி முதல் வவுனியா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சேவையை கொண்டு செல்லுமாறு கூறி வவுனியா பஸ் நிலையத்தை மூடியுள்ளார்.

இந்த ஆணை முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல், பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வௌியிட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள்,

அந்தவகையில், ஓவ்வொரு சாலையிலும் உள்ள போக்குவரத்து தொழிற்சங்கமும் அரசாங்கத்தினால் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டது. வடமாகாண போக்குவரத்துச் சபையின் பிரச்சினைகளை ஆரம்பத்தில் இருந்து முதலமைச்சரிடம் கொண்டு சென்றிருந்தோம்.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் கீழ் சேவையாற்றுகின்றீர்கள். நான் மாகாண அமைச்சின் கீழ் இருக்கின்றேன். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று முதலமைச்சர் தெரிவித்தாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

எதிர்காலத்தில் எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில், நிரந்தரமாக இலங்கைப் போக்குவரத்துத் துறையினருக்கு எழுத்து மூலம் ஆவணம் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தமது ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டால், புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவை செய்வதற்கு தடை ஏதும் ஏற்படாது. தற்போது வடமாகாண போக்குவரத்து அமைச்சை டெனிஸ்வரனிடம் இருந்து பறித்து, முதலமைச்சர் தன்னகத்தே வைத்துக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எத்தனை அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தாலும் எமக்குக் கவலையில்லை. ஒவ்வொரு அமைச்சுக்களின் தார்மீக பொறுப்புக்களையும் உணர்ந்து முதலமைச்சர் செயற்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொழிற்சங்க ஊழியர்களிடம் எந்தவித கருத்துக்களையும் பெறாது, தன்னிச்சையாக, பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் குறைபாடுகளை சீர்செய்யாது, உடனடியாக கடந்த 25 முதல் புதிய பஸ் நிலையத்தில் சேவையாற்ற வேண்டுமென்று பணிப்பது கண்டிக்கத்தக்க விடயம்.

முதலமைச்சரை மதிக்கின்றோம். ஆனால், முதலமைச்சரினால் விதிக்கப்பட்ட இந்த ஆணை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண போக்குவரத்துச் சபையினரும் கைகோர்க்க முன்வந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச துறை சார்ந்தவர்கள், முதலமைச்சருடன் பேசி, தமது கோரிக்கைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a comment