மக்கள்தான் இறுதி எஜமானர்கள்: ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

13138 0

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்டபோது, ‘தனிக்கட்சி தொடங்கும் ரஜினிக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இது தமிழன் பண்பாடு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். ஆனால், வெற்றியை தீர்மானிப்பது மக்கள்தான். மக்கள் ஆதரவைக் கொண்டுதான் அரசின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும். மக்கள்தான் இறுதி எஜமானர்கள்’ என்றார்.
ஓராண்டாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் சிரிக்கக்கூடிய வகையில் இருக்கிறது என்று ரஜினி கூறியது பற்றி கேட்டபோது, பொத்தாம் பொதுவாக சொல்லும் கருத்துக்கு இப்போதைக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், அ.தி.மு.க. பெயரை குறிப்பிட்டு ரஜினி விமர்சனம் செய்யவில்லை என்றும் கூறினார்.
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி குறித்து கேட்டபோது, தி.மு.க. வழியில் டிடிவி தினகரன் ஹவாலா டோக்கன் சிஸ்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார். 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக ஆர்.கே.நகர் மக்கள் அவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள், என்றார் ஜெயக்குமார்.

Leave a comment