புதிய பேரவை தொடங்குகிறார் தினகரன்

13908 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற டி.டி.வி. தினகரன் புதிய பேரவையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க. பிளவுக்கு பிறகு டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார்.

கட்சியும், ஆட்சியும் தங்கள் வசம் இருப்பதால் தொண்டர்கள் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கும் நமக்கு தான் அதிகமாக இருக்கும் என்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் நம்பினார்கள்.

ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேச்சையாக நின்று சுயேச்சை சின்னத்தில் அபார வெற்றி பெற்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்லீப்பர் செல்களாக பலர் இருக்கிறார்கள் என்று தினகரன் சொல்லி வந்த நிலையில் தேர்தல் வெற்றியின் மூலம் அது நிரூபணமானது.

இதையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் தினகரன் அணியில் திரண்டு வருகிறார்கள்.

இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று தினகரன் கூறி வருதால் அவரை எதிர்கொள்ளவும் அ.தி.மு.க. வினர் தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் தினகரன் புதிய பேரவையை தொடங்க திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் (ஜனவரி) பேரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தினகரன் அணியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. புதிதாக தொடங்கப்போகும் பேரவைக்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்காக விண்ணப்ப படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ஆன்-லைன் மூலமும் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனி மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரில் சசிகலாவை சந்தித்து வந்த பிறகே பேரவை தொடங்கும் திட்டம் வேகம் எடுத்துள்ளது. தனது ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இ.பி.எஸ், ஒ.பி.எஸ். மீது அதிருப்தியில் இருப்பவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவே பேரவை தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எந்த பதவியும் இல்லாமல் இருக்கிறார்கள். இதேபோல் தன்னை நம்பி வந்தவர்களுக்கும் பதவிகள் வழங்க முடிவு செய்துள்ளார்.

கடந்த 29-ந்தேதி நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பேரவை மூலம் இ.பி.எஸ், ஒ.பி.எஸ். அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். பேரவை தொடக்க விழா சென்னையில் நடத்தப்படுகிறது. பேரவைக்கு ஆதரவு திரட்டுவதற்காக தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

Leave a comment