ரஜினியின் அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் தெரிகிறது: நாஞ்சில் சம்பத்

14857 0

நடிகர் ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் இருப்பதை பார்க்கிறேன் என டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் மத்தியில் அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார்.

ரஜினியின் அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பலரும் கட்சி தொடங்கி உள்ளனர். ரஜினியும் பத்தோடு ஒன்று பதினொன்றாக தொடங்கி உள்ளார். அரசியலில் ஈடுபடுவது பெரிய வி‌ஷயமல்ல. பல தடைகளை, சவால்களை சந்திக்க வேண்டும். அரசியலில் கரை சேர்ந்து வெற்றி முகடை எட்டிப்பிடிப்பது சாதாரண வி‌ஷயமல்ல.

ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் இருப்பதை பார்க்கிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேருபவர்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கூட்டணி அமைக்கலாம். ஆனால் கரை சேருவதும், வெற்றியை ருசிப்பதும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.

அதில், டி.டி.வி. தினகரன் ஒருவர். அவரால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இன்று அவரை குறை கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருமே தினகரன் ஆதரவால் கட்சியில் உயர்ந்தவர்கள்.

இதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பழையவற்றை மறந்தால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். அதுதான் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவில் தெரிய வந்தது. இரட்டை இலையை அத்தொகுதி மக்கள் கிள்ளி எறிந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment