நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுவிட்டோம் – சமஷ்டி இல்லாத சமஷ்டி முறை

257 0

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் இருக்கும் என்று சொல்லுகின்ற அடிப்படை மாற்றமே இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைகள் பற்றி வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று நல்லூர் இளம்கலைஞர் மண்டபத்தில், யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சோ.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகிறார், உத்தேச அரசியல் அமைப்பு இந்த நாட்டை இரண்டு துண்டாக பிரிக்கும் என்று. சமஸ்டி ஆட்சியை கொண்டு வருகின்றனர். சமஸ்டி ஒரு பிரிவினைக்கு முதற்படியாக இருக்கும் என்று கூறுகின்றார்.

அதேபோல் எமக்குள் சில கூறுகின்றனர் இங்கு சமஸ்டியே இல்லை என்று.

ஆனால் நாங்கள் மக்களுக்கு கொடுத்த ஆணையினை தான் அரசியல் தீர்விலே நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணை என்ன? அதன்படியே சௌற்படுகின்றோம். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.

இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று அந்த இடைக்கால அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. அனால் சமஷ்டி கட்டமைப்பிலான ஆட்சி முறையே இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

அடிப்படையிலேயே ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கான மாற்றத்தை காண்பிக்கின்ற அறிக்கையாகவே இந்த இடைக்கால அறிக்கை இருக்கின்றது.

ஆகவே இந்த இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

Leave a comment