ஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் – முதலமைச்சர் வழங்கினார்

280 0

ஊட்டியில் இன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் 29-வது மாவட்டமாக நீலகிரியில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இதற்காக ஊட்டி ரேஸ்கோர்சில் பிரமாண்ட மேடை, பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழா இன்று காலை தொடங்கியது.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அர்ஜூணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்காட்சியை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து ரூ. 57.86 கோடி செலவில் 258 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் ரூ. 272.36 கோடியில் 1088 புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பிறகு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் 19,079 பயனாளிகளுக்கு ரூ. 81.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நன்றி கூறினார்.

விழாவுக்கு வந்த பொது மக்கள் அமர விழா பந்தலில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. பந்தலின் உட்புறம் பல்வேறு வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழா பந்தலுக்கு வந்து வெளியே செல்ல வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தலில் அமர்ந்து இருந்தவர்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு இருந்தது. இதில் மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் ஒளிபரப்பட்டது.

விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

Leave a comment