நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு

338 0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு எதிரே அடுக்குமாடி  குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் தீ பிடித்தது. பின்னர் தீ மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியது. இவ்வாறு 5வது மாடி வரை தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 1 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் பலியாகினர். 4 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் வழங்கினர்.
கால் நூற்றாண்டுகளில் இது மிகவும் மோசமான தீ விபத்து என  நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்தார்.
கடந்த 18-ம் தேதி நியூயார்க்கின் ப்ரூக்லின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். மார்ச் மாதம் பிராங்க்சில் குடியேறிய குடும்பத்தினரின் விடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a comment