ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு

408 0

வெற்றிவேல் வக்கீல்கள் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஏற்கனவே வெளியிடப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சியை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த 20-ந் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோன்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வெற்றிவேல் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோவையும், இதுதவிர வேறு ஏதேனும் வீடியோ பதிவு இருந்தால் அதையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வெற்றிவேலுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
இதைதொடர்ந்து வெற்றிவேல் வக்கீல்கள் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோவை ஒப்படைத்தனர். வீடியோ காட்சியை பார்வையிட்ட பின்னர், வெற்றிவேலிடம் நேரடி விசாரணை நடத்த அவருக்கு ஆணையம் தனியாக சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.

Leave a comment