பிரிவினைவாத கட்சிகள் வெற்றி: ஒற்றுமையாக இருக்க ஸ்பெயின் மன்னர் கோரிக்கை

259 0

கேட்டாலோனியா பாராளுமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒற்றுமையாக இருப்போம் என ஸ்பெயின் மன்னர் நான்காம் பிலிப் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கேட்டாலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது. அதற்கு 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில்,கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி கேட்டாலோனியா தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கேட்டாலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கேட்டாலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும், கேட்டாலோனியா நிர்வாகம் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் ஸ்பெயின் அரசு அறிவித்தது.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு கடந்த 21-ம் தேதி மறுதேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையில் பிரிவினைவாத கட்சிகளே அதிகமான இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

அதே வேளையில், ஸ்பெயின் அதிபர் ரஜோய்யின் கட்சி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. வெற்றிக்கு பின்னர் பேசிய கேட்டாலோனியா முன்னாள் பிரதமர் பூட்சியமோண்டின், “ஸ்பெயின் முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முழுவதும் பிரிவினைவாதிகளே வென்றுள்ள சூழலில் எங்கே மீண்டும் தனிநாடு கோரிக்கை வலுப்பெறுமோ என்று ஸ்பெயின் அச்சப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் மன்னர் நான்காம் பிலிப் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ஒற்றுமையாக இருக்க கேட்டாலோனியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ‘மோதலுக்கு பதிலாக சகவாழ்வு’ என்று தனது உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, கைது நடவடிக்கை பாயும் என்று கருதிய பூட்சியமோண்ட் இன்னும் ஜெர்மனியில் தான் உள்ளார். விரைவில், நாடு திரும்பி ஸ்பெயின் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published.